நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான நேரடி வாக்கு சேகரிப்பு ஓய்ந்தது…ஆன்லைன் பிரசாரத்துக்கும் தடை: தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!!
Author: Rajesh18 February 2022, 9:20 am
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான நேரடி பிரசாரம் ஓய்ந்த நிலையில் சமூக வலைதள பிரசாரத்துக்கு அனுமதியில்லை என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான நேரடி பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. இந்த தேர்தலில் சமூகவலைதளம் மூலம் பிரசாரம் மேற்கொள்ளும் பாணியை பெரும்பாலான வேட்பாளர்கள் மேற்கொண்டனர்.
அதாவது வாட்ஸ் அப், பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் வேட்பாளர்கள் வாக்கு சேகரித்தனர். தங்கள் பகுதியில் உள்ள வாக்காளர்களின் வாட்ஸ் அப் எண்களை பெற்று தங்களது வாக்குறுதிகளை வீடியோ மற்றும் ஆடியோவாக பதிவு செய்து வாக்காளர்களுக்கு அனுப்பி வைத்து ஆதரவு திரட்டினர்.
பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற வலைதளங்களில் பதிவிட்டும் பிரசாரம் மேற்கொண்டனர். இந்நிலையில் தேர்தலுக்கான நேரடி பிரசாரம் ஓய்ந்தநிலையில் வலைதளங்கள் மூலம் பிரசாரம் மேற்கொள்ளவும், விளம்பரங்கள் செய்வதற்கும் அனுமதியில்லை என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
சமூக வலைதளம் மூலம் பிரசாரம் மேற்கொள்வதாக புகார் வந்தால் சம்பந்தப்பட்ட வேட்பாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.