ஒரு EMI தான் பாக்கி…. பக்கவாதத்தால் பாதித்த முதியவரை வெளியே தள்ளிய வங்கி ஊழியர்கள்… கொதித்தெழுந்த பொதுமக்கள்..!!

Author: Babu Lakshmanan
29 June 2023, 8:57 pm

ஒரு மாத தவணையை செலுத்தாத பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட முதியவரை வீட்டை விட்டு வெளியேற்றிய வங்கி அதிகாரிகளின் செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் – பல்லடம் அருகே அருள்புரம் செந்தூர் காலனியில் வசித்து வருபவர் கந்தசாமி. 75 வயதான இவர் தனது மனைவி மற்றும் பேரன்களுடன் வசித்து வருகிறார். கடந்த 2021ம் ஆண்டு புது வீடு கட்டுவதற்காக அருள்புரத்தில் உள்ள “ஈக்விடாஸ்” என்ற தனியார் வங்கியில் தனது பேரன் தினேஷ் குமார் என்பவரின் பெயரில் 5 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன் பெற்றுள்ளார்.

மாதம் 11 ஆயிரம் ரூபாய் வீதம் இதுவரை இரண்டரை லட்சம் ரூபாய் வரை தவணைத் தொகையை திருப்பி செலுத்தி உள்ளார். இந்த சூழலில், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட கந்தசாமி, வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே உள்ளார். இதனால், இந்த மாதம் 10ம் தேதி கட்ட வேண்டிய 11 ஆயிரம் ரூபாய் தவணைத்தொகையை செலுத்தாமல் இருந்து வந்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களாக கந்தசாமியின் வீட்டிற்கு வந்த வங்கி ஊழியர்களான தினேஷ் மற்றும் மணி ஆகிய இருவர், இந்த மாதம் தவணைத் தொகையை இன்னும் கட்டாததால் உங்கள் வீட்டை பூட்டு போட வந்துள்ளதாகவும், வீட்டில் உள்ள டிவி, இருசக்கர வாகனம் ஆகியவற்றை எடுத்துச் செல்ல உள்ளோம் என மிரட்டியுள்ளனர்.

இந்நிலையில், இன்று கந்தசாமியின் வீட்டிற்கு வந்த வங்கி ஊழியர்கள், வீட்டுக்கு பூட்டு போட வேண்டும் எனக் கூறி வீட்டில் இருந்த பொருட்களை வெளியே போட்டுவிட்டு, நோய்வாய் பட்ட முதியவர் என்று கூட பாராமல், கந்தசாமியை நாற்காலியில் அமர வைத்து வீட்டிற்கு வெளியே கொண்டு வந்து சாலையில் அமர்த்தி உள்ளனர்.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ஒரு மாத தவணைத் தொகை கட்டாததற்காக வீட்டுக்கு பூட்டு போடுவீர்களா..? எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், அவர்கள் சம்பந்தப்பட்ட வங்கி ஊழியர்கள் மீதும் பல்லடம் காவல்துறையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தார் மற்றும் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் காவல்துறையினர் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Telangana bans special shows சிறப்பு காட்சிக்கு END CARD…அல்லு அர்ஜுன் ஷாக்…பேரதிர்ச்சியில் சினிமா ரசிகர்கள்…!
  • Views: - 529

    0

    0