களைகட்டிய பண்ணாரி அம்மன் குண்டம் திருவிழா : லட்சக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் நேர்த்திக்கடன்!

Author: Udayachandran RadhaKrishnan
4 April 2023, 9:36 am
Quick Share

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது பண்ணாரி மாரியம்மன் திருக்கோவில்.

இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் குண்டம் திருவிழாவில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான கர்நாடகாவில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீமிதித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.

அதேபோல் இந்த ஆண்டு குண்டம் திருவிழா கடந்த மார்ச் மாதம் 20ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது.

பின்னர் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் பண்ணாரி அம்மன், சருகு மாரியம்மன்‌‌ சத்தியமங்கலத்தை சுற்றியுள்ள சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக திருவீதி உலா வந்து பொதுமக்களுக்கு அருள் பாலித்தார்.

பின்னர் திருவீதி உலா நிறைவு பெற்று அம்மன் சப்பரம் கோவிலை வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று இரவு தீக்குண்டம் அமைக்க பக்தர்கள் காணிக்கையாக கொண்டு வந்த வேம்பு மற்றும் ஊஞ்சல் மரங்களை பயன்படுத்தி அடுக்கி வைக்கப்பட்டு பண்ணாரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து குண்டத்தில் தீ மூட்டப்பட்டது.

பின்னர் அதிகாலை 3 மணி அளவில் மங்கள வாத்தியங்களுடன் தெப்பக்குளத்திற்கு சென்று அம்மன் அழைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்பின்னர் அதிகாலை 3:50 மணியளவில் குண்டத்தைச் சுற்றி கற்பூரங்கள் ஏற்றி சிறப்பு குண்டத்திற்கு பூஜைகள் செய்யப்பட்டு தலைமை பூசாரி ராஜசேகர் குண்டம் இறங்கினார்.

அதனைத் தொடர்ந்து நீண்ட வரிசையில் காத்திருந்த சுமார் லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

குண்டம் இறங்கும் பக்தர்கள் கோவிலுக்குள் சென்று அம்மனை தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதேபோல் குண்டம் இறங்காமல் பண்ணாரி அம்மனை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு இந்த ஆண்டு சிறப்பு வழி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குண்டம் திருவிழாவை முன்னிட்டு பண்ணாரி அம்மன் வீணை அலங்காரத்தில் அருள் பாலித்தார். மாலை 4 மணி வரை பக்தர்கள் குண்டம் இறங்க அனுமதிக்கப்பட்டு அதனை தொடர்ந்து விவசாயிகள் வளர்த்து வரும் கால்நடைகள் குண்டம் இறங்க அனுமதிக்கப்படும்.

குண்டம் திருவிழாவில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க சுமார் 1500 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

குண்டம் இறங்கும் பொழுது எதிர்பாராத விதமாக தவறி விழுந்து தீக்காயம் ஏற்படும் பக்தர்களுக்கு முதலுதவி அளிக்க மருத்துவர்கள், செவிலியர்கள் தீவிர பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் தீ விபத்துகளை தடுக்க சுமார் 50க்கும் மேற்பட்ட தீயணைப்புத் துறையினரும் தற்போது பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

  • sarathkumar latest news நடுரோட்டிற்கு வந்த சரத்குமார்…வைரலாகும் வீடியோவால் பரபரப்பு..
  • Views: - 504

    0

    0