3ஆம் ஆண்டு தூ(ங்கும்)வக்க விழா.. பரபரப்புக்கு உள்ளான பேனர்.. போலீஸ் கூறுவது என்ன?
Author: Hariharasudhan19 January 2025, 12:21 pm
வேங்கை வயல் கிராமத்தில், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவம் நடைபெற்று இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்னும் முடிவு எட்டப்படாததால் வைக்கப்பட்டுள்ள பேனர் பேசுபொருள் ஆகியுள்ளது.
புதுக்கோட்டை: “3-ஆம் ஆண்டு தூ(ங்கும்)வக்க விழா, வேங்கை வயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த வழக்கு புலன் விசாரணையில், அசையா ஆமை, நகரா நத்தை அத்தனையும் சொத்தை என்று எங்களால் போற்றப்படும் CBCID, இவ்வழக்கை தொடர்ந்து 100 ஆண்டுகள் விசாரணை செய்ய வாழ்த்துகிறோம். பாதிக்கப்பட்ட வேங்கை வயல் ஊர் பொதுமக்கள்” என வேங்கை வயல் ஊர் பொதுமக்களால் வைக்கப்பட்டுள்ள பேனரில் இந்த வரிகள் இடம் பெற்றுள்ளது.
இது தற்போது பேசு பொருளாகி உள்ளது. இந்த நிலையில், இது தொடர்பாக போலீசார் கூறுவதாக, ” வேங்கைவயல் சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. அதனை உணர்த்தும் வகையில், கடந்த மாதம் 26 அன்று, வேங்கை வயல் கிராமத்தில் பேனர் வைக்க சிலர் ஏற்பாடு செய்துள்ளனர்.
அதற்காக, தயார் செய்யப்பட்ட பேனர் குறித்து தகவல் கிடைத்ததும், போலீஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. எனவே, பேனர் வைக்கப்படவில்லை. இருப்பினும், அந்த பேனரை வீடியோவாக எடுத்து, சமூக வலைத்தளங்களில் பரப்பி விட்டுள்ளனர். உள்ளூரில் விசாரித்த வரையில், எதிர்கட்சியினர் தூண்டுதலில் தான் யாரோ இதனைச் செய்திருக்க வேண்டும். மேலும், தீவிர விசாரணை நடக்கிறது” பிரபல நாளிதழ் செய்தி வெளியிட்டு உள்ளது.
முன்னதாக, புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயல் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது, கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி எனத் தெரிய வந்தது. இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து சிபிசிஐடி விசாரித்து வருகிறது. மேலும், ஓய்வுபெற்ற நீதிபதி சத்திய நாராயணன் தலைமையிலான ஒரு நபர் ஆணையமும் இதனை விசாரித்தது.
இதையும் படிங்க: இளையராஜானு ஒருத்தன் இருக்கான்.. மிஷ்கின் பேச்சால் வெடித்த சர்ச்சை!
இதன்படி, 220க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை செய்த சிபிசிஐடி போலீசார், 5 சிறுவர்கள் உள்பட 31 பேரை டிஎன்ஏ சோதனைக்கு உட்படுத்தினர். அதில், ஒரு காவலர் உள்பட 5 பேரை குரல் மாதிரி சோதனைக்கு உட்படுத்தினர். ஆனால், இரண்டு வருடங்களைக் கடந்தும் இதில் முடிவு எட்டப்படவில்லை.