ரூ.4 ஆயிரம் பணம் திருடியதற்காக பார் ஊழியர் படுகொலை : பின்னணியில் பிரபல பார் உரிமையாளர்… போலீசார் தீவிர விசாரணை!!
Author: Udayachandran RadhaKrishnan19 April 2022, 9:45 pm
திருப்பூர் : பல்லடம் அருகே பார் ஊழியர் அடித்து கொடூர கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பார் உரிமையாளர் உட்பட 7 பேரை கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ள மகாலட்சுமி நகர் பகுதியில் குடியிருந்து வருபவர் முருகன்.அதே பகுதியில் மதுரை மண்பானை சமையல் என்ற உனவகம் நடத்தி வருகிறார்.
மேலும் மகாலட்சுமி நகர், கரடிவாவி, காமநாயக்கன்பாளையம் உட்பட 5 இடங்களில் டாஸ்மாக் பார் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் கடந்த 16ம் தேதி காமநாயக்கன்பாளையம் பாரில் 4000 ரூபாய் காணாமல் போனதை அடுத்து அங்குள்ளவர்களிடம் விசாரித்த போது அங்கு வேலை செய்த போடியை சேர்ந்த முத்து என்பவர் பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டார்.
மேலும் பார் உரிமையாளர் முருகனை தகாத வார்த்தையில் பேசியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த முருகன் முத்துவை காரில் ஏற்றி மகாலட்சுமிநகரில் உள்ள மதுரை மண்பானை உணவகத்துக்கு அழைத்து வந்து சக ஊழியர்களுடன் சேர்ந்து முத்துவை கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதில் மயக்கமடைந்த முத்துவை காரில் வைத்து திண்டுக்கல் கொண்டு சென்றுள்ளனர்.காரில் செல்லும் போது முத்துவை பரிசோதித்த பார்த்த போது உயிரிழந்தது தெரிய வந்தது.
அதனை தொடர்ந்து அம்மையநாயக்கனூரில் உள்ள ரயில்வே பாலத்தின் கீழ் முத்துவின் உடலை வீசிவிட்டு அருவாளால் கழுத்தை அறுத்தும் கற்களால் முகத்தை சிதைத்து விட்டும் அங்கிருந்து தப்பியுள்ளனர்.
இந்நிலையில் மறுநாள் காலை அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடப்படதாக அம்மையநாயக்கனூர் கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து அம்மைய நாயக்கனூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் கொலை செய்யப்பட்டது போடி சொக்கலிங்கம் நகரை சேர்ந்த கணேசன் என்பரது மகன் முத்து (வயது 32) என்பதும் தெரிய வந்தது.
அதனை தொடர்ந்து நிலக்கோட்டை துணை கண்காணிப்பாளர் சுகுமார் தலைமையில் அம்மைய நாயக்கனூர் போலீசார் கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்த நிலையில் வழக்கில் தொடர்புடைய பார் உரிமையாளர் முருகன் மற்றும் கோபால், வீராசாமி, மருது செல்வம், கார்த்திக், கவண் ஆகியோர் பல்லடத்தில் பதுங்கி இருந்தது தெரிய வந்தது.
அதனை தொடர்ந்து பல்லடம் வந்த திண்டுக்கல் போலீசார் அவர்களை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பணத்தை திருடிய முத்துவை அனைவரும் சேர்ந்து தாக்கியதும், பின்னர் கொலையை மறைப்பதற்காக முத்துவின் கழுத்தை அறுத்ததோடு முகத்தை சிதைத்து அம்மைய நாயக்கனூர் அருகே ரயில் தண்டவாளத்தில் வீசியதும் ஒப்பு கொண்டனர்.
பார் ஊழியரை 4000 ரூபாய்க்காக கொடூரமாக கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிடிபட்ட 7 பேரையும் பல்லடம் மகாலட்சுமி நகரில் சம்பவம் நடந்த மதுரை மண்பானை சமையல் ஹோட்டலில் எவ்வாறு கொலை சம்பவம் அரங்கேறிற்றினர் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.