பேரூராட்சி தலைவரின் மண்டைக்கு குறிவைத்த துணைத் தலைவர்.. பொங்கல் விழா உறியடி போட்டியில் ஜஸ்ட்டு மிஸ்ஸான சம்பவம்…!!
Author: Babu Lakshmanan13 January 2024, 2:09 pm
வத்தலகுண்டு பேரூராட்சி சார்பில் பொங்கல் விழா உறியடி நிகழ்ச்சியில் தலைவரின் மண்டையைக் குறி வைத்த துணைத்தலைவரால் கலகலப்பு நிலவியது.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பேரூராட்சி சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. பேரூராட்சி அலுவலகம் முன்பு பொதுமக்கள் இணைந்து பங்கேற்ற சமத்துவ பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் பேரூராட்சி சார்பில் நடந்த விளையாட்டு போட்டியில் உரியடிக்கும் போட்டியில் துணைத் தலைவர் தர்மலிங்கம் கண்ணைக் கொட்டிக்கொண்டு உரியடிக்கும் களத்தில் இறங்கினார்.
ஆரவாரத்துடன் இலக்கை அடைந்த துணைத் தலைவர் நேராக பானை இருக்கும் பக்கம் செல்லாமல், சினிமா பட பாணியில் எதிரே நின்றிருந்த பேரூராட்சி மன்ற தலைவர் சிதம்பரம் நோக்கி சென்று, பானை இலக்கு வந்துவிட்டது என நினைத்து ஓங்கி அடிக்க தலைவர் ஒதுங்கிக் கொண்டார்.
அப்போது, அங்கு கூடி இருந்தவர்கள் சந்தடி சாக்கில் தலைவர் மண்டையை துணைத்தலைவர் உடைக்க பார்த்தார் என கூறியதால் அங்கு சிரிப்புடன் கூடிய ஆரவாரம் நிலவியது. கடைசியாக தலைவர், “ஏது என்றாலும் பேசி தீர்த்துக்கலாம். அதற்காக மண்டையை உடைக்கலாமா..?’ என கேட்டதால் அந்த இடத்தில் சிரிப்பொலி ஆனது.