கூத்தாண்டவர் கோவிலில் அழகிப்போட்டி…சென்னை அழகி ‘மிஸ் கூவாகம்’ பட்டம் வென்றார்: மெய் சிலிர்க்க வைத்த நடன நிகழ்ச்சி..!!

Author: Rajesh
18 April 2022, 12:52 pm

விழுப்புரம்: கூத்தாண்டாவர் கோவில் திருவிழாவில் நடைபெற்ற அழகிப்போட்டியில் மிஸ் கூவாகம் ஆக சென்னையை சேர்ந்த சாதனா திருநங்கை தேர்வு செய்யப்பட்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் கூவாகம் என்ற பகுதியில் இருக்கும் இந்த கூத்தாண்டவர் கோவில் திருநங்கைகளுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது.

இந்தக் கோவிலில் இருக்கும் மூலவர் அரவான். இங்கு சித்திரை மாதம் நடக்கும் திருவிழாவில், சித்ரா பௌர்ணமி நாளானது மிகவும் விசேஷமாக அரவானை கணவனாக நினைத்துக்கொண்டு திருநங்கைகள் தாலி கட்டிக்கொள்ளும் சடங்கு இந்த கோவிலில் மிகவும் விசேஷம். இந்த சடங்கில் கலந்து கொள்வதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திருநங்கைகள் கூத்தாண்டவர் கோவிலுக்கு வந்துள்ளனர்.

கடந்த 5ம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியோடு கூத்தாண்டவர் கோவில் திருவிழா தொடங்கியது. இந்த திருவிழாவிற்கு இந்தியாவில் டெல்லி, மும்பை, கொல்கத்தா, கேரளா, பெங்களூர் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து திருநங்கைகள் இங்கு வந்து குவிந்துள்ளனர்.

18 நாட்களும் தினம் தினம் ஒரு நிகழ்ச்சி என கூவாகம் கிராமமே களைகட்டியுள்ளது. கூத்தாண்டவர் நினைத்ததை நிறைவேற்றுவதால் அவரை பக்தியுடன் ஆண்டுதோறும் விழா எடுத்து வழிபடுகின்றனர்.

திருநங்கைகளை மகிழ்விக்கும் வகையிலும், உற்சாகப்படுத்தும் விதமாகவும் நேற்று மாலை விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், விழுப்புரம் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு, சென்னை திருநங்கை தலைவர்கள் அமைப்பு மற்றும் தொண்டு நிறுவனங்கள் இணைந்து கூவாகம் திருவிழா என்ற தலைப்பில் திருநங்கைகளுக்கான பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியது.

இதற்கு முன்னிஜி நாயக் தலைமை தாங்கினார். உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, திருச்சி சிவா எம்.பி. ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர். இதில் துரை.ரவிக்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, டாக்டர் லட்சுமணன், மாநில திட்டக்குழு உறுப்பினர் நர்த்தகி நடராஜ், நடிகர் சூரி, நடிகை நளினி, விழுப்புரம் முன்னாள் நகரமன்ற தலைவர் ஜனகராஜ், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், விழுப்புரம் நகரமன்ற தலைவர் சக்கரை தமிழ்செல்வி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியின் தொடக்கமாக திருநங்கைகளுக்கான நடனப்போட்டிகள் நடைபெற்றது. அதன் பிறகு திருநங்கைகளின் பாரம்பரிய கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பின்னர் மிஸ் திருநங்கை அழகிப்போட்டிக்கான தேர்வு நடந்தது.

இதில் சென்னை, சேலம், ஈரோடு, மதுரை, கோவை, திருச்சி, விழுப்புரம், நாமக்கல், தஞ்சாவூர், தூத்துக்குடி, நெல்லை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 150 திருநங்கைகள் கலந்துகொண்டு விதவிதமான, வண்ண, வண்ண உடைகளில் மேடையில் தோன்றி ஒய்யாரமாக நடந்து வந்தனர்.

மிஸ் திருநங்கையாக யாரை தேர்ந்தெடுப்பது என்பதற்காக இவர்கள் 3 பேருக்கும் எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்தும், பொது அறிவுத்திறன் குறித்தும் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. இதில் சிறந்த முறையில் பதில் அளித்த சென்னையை சேர்ந்த சாதனா மிஸ் திருநங்கையாக தேர்வு செய்யப்பட்டார். சென்னையை சேர்ந்த மதுமிதா 2-ம்இடத்தையும், சென்னையை சேர்ந்த எல்சா 3-ம் இடத்தையும் பிடித்தனர்.

இவர்களில் முதலிடம் பிடித்த சாதனாவுக்கு கிரீடம் சூட்டப்பட்டு ரூ.15 ஆயிரம் பரிசாக வழங்கப்பட்டது. அதேபோல் 2-வது இடம் வந்தவருக்கு ரூ. 10 ஆயிரமும், 3 வது பரிசு ரூ. 5 ஆயிரமும் வழங்கப்பட்டது. இதேபோல் நடனப்போட்டியில் வெற்றி பெற்ற திருநங்கைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளாக 19ஆம் தேதி திருநங்கைகள் தாலிகட்டும் நிகழ்வும் அதனை தொடர்ந்து 20ஆம் தேதி காலை தேர் திருவிழாவும் தொடர்ந்து திருநங்கைகள் தாலி அறுத்து வெள்ளை சேலை உடுத்தும் நிகழ்வும் நடைபெறவுள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1318

    0

    0