வாடிக்கையாளர் போல ப்யூட்டி பார்லர்களில் திருட்டு.. தமிழகம், புதுச்சேரியில் கைவரிசை காட்டிய பெண் சென்னையில் கைது..!!
Author: Babu Lakshmanan30 April 2022, 10:28 pm
புதுச்சேரி மற்றும் தமிழக பகுதிகளில் உள்ள ப்யூட்டி பார்லர்களில் வாடிக்கையாளர் போல் நடித்து நூதன முறையில் திருடிட்டில் ஈடுப்பட்ட ஆந்திராவை சேர்ந்த பெண்ணை புதுச்சேரி போலிசார் சென்னையில் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
புதுச்சேரி சண்முகாபுரத்தை சேர்ந்தவர் லட்சுமி (43). இவர் அதே பகுதியில் மேட்டுபாளையம் காவல் நிலையம் எதிரே பெண்களுக்கான அழகு நிலையம் மற்றும் தையலகம் வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த 9 ஆம் தேதி மதியம் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வந்து லட்சுமியிடம் தன்னை தான் தொண்டு நிறுவனம் ஒன்றில் பணிபுரிவதாகவும், ஆதரவற்றோர்க்கு கொடுப்பதற்கு அதிக அளவில் துணிகள் தைக்க வேண்டி உள்ளது என்றும் கூறியுள்ளார்.
இதற்காக தனது தொண்டு நிறுவனத்தின் உரிமையாளர் வர உள்ளதாகவும், அவருக்கு அதிக அளவில் நகைகள் அணிந்து ஆடம்பரமாக இருப்பது பிடிக்காது என்று அந்த பெண் கூறியுள்ளார். இதனை நம்பிய லட்சுமி, தன் கழுத்தில் அனிந்திருந்த 5 சவரன் தங்க நகை, 5 சவரன் கொண்ட செயின், கம்மல் ஆகியவற்றை கழற்றி வரவேற்பறையில் உள்ள தனது மேஜை ட்ராயரில் வைத்துவிட்டு உள்ளே சென்றுள்ளார்.
திரும்பி வருவதற்குள் அந்த பெண் தனது நகைகளுடன் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த லட்சுமி, எதிரே உள்ள மேட்டுபாளையம் காவல்நிலையத்திற்கு சென்று நடந்தவை குறித்து கூறி புகார் அளித்துள்ளார். இதையடுத்து இது குறித்து வழக்கு பதிவு செய்த போலிசார் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்ததில், அந்த பெண் கடைக்குள் செல்வது பதிவாகி இருந்ததை அடுத்து, கேமிராவில் பதிவான உருவத்தை கொண்டு அந்த பெண் யார் என்பதை கண்டுப்பிடிப்பதில் போலீருக்கு தொய்வு ஏற்பட்டது.
இதனை அடுத்து இவ்வழக்கை வடக்கு கண்காணிப்பாளர் பக்தவசலம் வடக்கு குற்ற பிரிவு போலீசாருக்கு மாற்றம் செய்து, தலைமை காவலர் ராஜு பீட்டர் தலைமையிலான போலிசார் தீவிர விசாரணையில் ஈடுப்பட்டனர். இதில், புதுச்சேரியில் நடந்தது போலவே இதே பாணியில் இந்த மாதம் மட்டும் கடலூர், திண்டிவனம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய ஊர்களில் ஒரு பெண் இப்படி நூதன முறையில் நகை திருட்டில் ஈடுப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து அனைத்து சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்த போலீசார் அதன் அடிப்படையில் கிடைத்த தகவலின்படி, அந்த பெண் ஆந்திரா மாநிலம் கடப்பாவை பூர்விகமாக கொண்ட பட்டதாரி பெண் டைய்சி மார்ட்டின் (39) என்பதும், தற்போது சென்னை பள்ளிக்கரணையில் வசித்து வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, போலீசார் டைய்சியை நேற்று நள்ளிரவு பள்ளிக்கரணையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கைது செய்து புதுச்சேரி அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், அவர் கடப்பாவில் இருந்து சென்னை வந்து வசித்து வருவதாகவும், இதுபோல் பல இடங்களில் நூதன திருட்டில் ஈடுபட்டு இருப்பதும், கடந்த 2017 முதல் ஆந்திராவில் மட்டும் 20 வழக்குகளும், தமிழகத்தில் 6 வழக்குகளும் இதுவரை இவர் மீது நிலுவையில் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து டைய்சியிடம் இருந்து புதுச்சேரியில் இருந்து திருடி செல்லப்பட்ட 10 சவரன் தங்க நகைகளை அடகு கடையில் இருந்து மீட்ட போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் டைய்சியை திண்டிவனம், கடலூர், மற்றும் செங்கல்பட்டு போலீசார் புதுச்சேரி சிறையில் இருந்து விசாரணைகாக காவலில் எடுத்து அப்பகுதிகளில் திருடிய நகைகளை மீட்க திட்டமிட்டுள்ளதாக புதுச்சேரி போலிசார் தகவல் தெரிவித்துள்ளனர்.