பைக்குடன் சாக்கடையில் தவறி விழுந்த வாகன ஓட்டி… எழ முடியால் சிக்கி தவிப்பு… அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என குற்றச்சாட்டு..!!
Author: Babu Lakshmanan20 September 2023, 9:27 am
சாத்தான்குளத்தில் சாலையோர பள்ளத்தில் பைக்குடன் கவிழ்ந்து சாக்கடையில் வாகன ஓட்டி தவறி விழுந்த சம்பவத்தால் பரபரப்பு நிலவியது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் இருந்து நாசரேத் செல்லும் பிரதான சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்றது. இந்த பணியின் போது அந்த கால்வாயின் சுற்று சுவரின் உயரத்தை அதிகரிக்காமல் சாலையின் தரைமட்ட உயரத்திற்கே கால்வாயின் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால், வாகன ஓட்டிகள் சாலையில் செல்லும்போது, திடீரென சாலையில் இருந்து விலகி கால்வாயின் சுற்றுச்சுவரின் மீது ஏறி, அதன் உள்விழும் அபாயம் இருந்ததாக வாகன ஓட்டிகள் ஏற்கனவே எச்சரித்தனர்.
இந்த நிலையில், அந்த வழியாக வந்த இருசக்கர வாகன ஓட்டி ஒருவர், சாலைக்கும் கால்வாய் தடுப்புச் சுவரும் ஒரே மட்டத்தில் உள்ளதால் திடீரென தவறி அவர் கால்வாய்க்குள் இருசக்கர வாகனத்துடன் “பொத்தென”விழுந்து விட்டார்.
உடனே அங்கிருந்தவர்கள் கயிறு மூலம் பைக்கை மீட்டு அவரையும் பத்திரமாக மீட்டனர். எனவே, அந்த பகுதியில் சாலை மட்டத்தில் உள்ள கால்வாய் சுவரை சற்று உயர்த்தி அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.