பாஜக கூட்டணி கட்சி தலைவர் ஏசி சண்முகம் மருத்துவமனையில் அனுமதி : பதறி ஓடிய அண்ணாமலை!
Author: Udayachandran RadhaKrishnan15 June 2024, 1:24 pm
புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம் உடல்நலக்குறைவு காரணமாக சில நாட்களுக்கு முன்பு சென்னை நுங்கம்பாக்கம் நெல்சன் மாணிக்கம் சாலையில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு பல்வேறு பரிசோதனைகளுக்கு பிறகு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவர் தற்போது நலமாக உள்ளார்.
புதிய நீதிக் கட்சியின் தலைவர் டாக்டர் ஏ.சி.சண்முகம் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவ பரிசோதனையின் அடிப்படையிலும், மருத்துவர்களின் பரிந்துரையின் படியும் அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. அறுவை சிகிச்சைக்குப் பின் அவர் நலமாக உள்ளார். மேலும், ஒரு மாதம் காலம் ஓய்வில் இருக்குமாறு மருத்துவர்கள் அவருக்கு அறிவுறுத்தி உள்ளனர் என மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஓய்வில் இருந்து வரும் புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகத்தை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
அப்போது புதிய நீதிக்கட்சி செயல் தலைவர் ஏ. ரவிக்குமார், ஏ.சி.எஸ். குழுமத் தலைவர் ஏ.சி.எஸ். அருண்குமார் ஆகியோரும் உடனிருந்தனர். தற்போது இதுதொடர்பான புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ஏ.சி. சண்முகம் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேலூர் தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிட்டார்.
எனினும் வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார். 3 லட்சத்து 52, 990 வாக்குகள் பெற்று ஏசி சண்முகம் இரண்டாம் இடம் பிடித்திருந்தார்.l