எம்எல்ஏ வானதி சீனிவாசன் குறித்து ஆபாசப் பதிவு.. திமுகவினர் மீது சைபர் கிரைம் காவல்நிலையத்தில் பாஜகவினர் புகார்..!!
Author: Babu Lakshmanan6 July 2023, 2:23 pm
கோவை ; பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பதிவிட்டதாக திமுகவினர் மீது பாஜகவினர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
கோவை பெரிய கடை வீதி பகுதியைச் சேர்ந்தவர் கண்மணி பாபு (எ) கணேஷ் பாபு. இவர் பா.ஜ.க கோவை மாநகர மாவட்ட செயலாளராக உள்ளார். இவர் கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.
அதில், சமூக வலைத் தளங்களை பார்த்துக் கொண்டு இருந்த போது, அதில் பாஜக கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் பற்றி திமுகவினரும், அவர்களுக்கு ஆதரவாக சிலரும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் மிகவும் ஆபாசமாகவும், அருவருக்க தக்க வகையிலும், பெண்மையை கொச்சைப்படுத்தும் வகையிலும், இருபால் இனத்தவர் இடையே கலவரத்தை துண்டும் வகையிலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியை பற்றி அவதுறுகளையும் பதிவு செய்து வருகிறார்கள்.
ஒரு பெண்ணை கீழ்த்தரமாக அவரது கற்பை பற்றி கேவலமாக விமர்சித்தும், அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் மிகவும் மோசமான அநாகரிகமான பதிவுகளை பெண் உரிமைக்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டு உள்ளார். மேற்படி பதிவுகள் சம்பந்தமாக தங்களது கருத்துக்களை ஒருவருக்கொருவர் வெளிப்படையாக பேசி கருத்துகளை பதிவு செய்து வருகிறார்கள்.
சமூக வலைதளமான ட்விட்டர், முகநூல் பக்கம் மூலம் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் பொதுமக்கள் இடையே பகைமையும், வெறுப்பு உணர்வையும் தூண்டி, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கும் இறையாண்மைக்கும் எதிராகவும், இரு பால் இனத்தவர் இடையே கலவரத்தை தூண்ட வேண்டும் என்ற எண்ணம் கெட்ட எண்ணத்திலும், ஒரு பெண்ணை மக்கள் பிரதிநிதி என்று கூட பாராமல் அவர்களின் நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்க வேண்டும் என்ற கெட்ட எண்ணத்திலும் மேற்படி பதிவுகளை பதிவு செய்து வருகிறார்கள்.
எனவே, மேற்படி நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அந்த மனுவில் கூறியுள்ளார்.