பிரதமர் மோடி இருக்க வேண்டிய இடத்தில் CM ஸ்டாலினின் பேனரா..? மக்களை தேடி மருத்துவ முகாம் பணியாளர்களை விரட்டியடித்த பாஜகவினர்…!!

Author: Babu Lakshmanan
23 January 2024, 9:17 pm

பிரதமர் மோடி இருக்க வேண்டிய இடத்தில் தமிழக முதல்வரின் பேனரை வைப்பதா? என்று கூறி நெல்லையில் மக்களை தேடி மருத்துவ முகாம் பணியாளர்களை விரட்டியடித்த பாஜகவினரால் பரபரப்பு நிலவியது.

தமிழக சுகாதாரத் துறை சார்பில் மக்களை தேடி மருத்துவ முகாம் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் வசிக்கும் இடங்களுக்கே சென்று முகாம் அமைத்து மக்களுக்கு இலவசமாக மருத்துவ சேவை வழங்கி வருகின்றனர். அந்த வகையில், நெல்லை மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் நெல்லை சந்திப்பு சி.என் கிராமம் பகுதியில் இன்று மக்களை தேடி மருத்துவ முகாம் நடைபெற்றது.

அதே நேரத்தில் ஒன்றிய அரசின் நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற திட்டத்தின் கீழ் மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் கலந்து கொண்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி, அதே சி.என் கிராமத்தில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையொட்டி, அங்குள்ள கோயில் முன்பு பாஜகவினர் ஷாமினார் பந்தல் அமைத்திருந்தனர்.

இதற்கிடையில் அப்பகுதியில் வெயில் தாக்கம் அதிகமாக காணப்பட்டதால் தமிழக அரசு சார்பில் மக்களை தேடி மருத்துவ முகாம் நடத்துவதற்காக அங்கு வந்திருந்த மருத்துவ பணியாளர்கள் பாஜக சார்பில் போடப்பட்டிருந்த பந்தலில் அமர்ந்து முகாமை நடத்தி வந்தனர். அப்பகுதியைச் சேர்ந்த முதியவர்கள் உட்பட பலர் முகாமில் பங்கேற்று மருத்துவ பரிசோதனை செய்து கொண்டிருந்த நிலையில், அங்கு வந்த பாஜகவினர் உடனடியாக முகாமை அப்புறப்படுத்தும்படி கூறியதால் மருத்துவப் பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும், மருத்துவ முகாம் தொடர்பாக அங்கு தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் உருவப்படம் பொறித்த பேனர் வைக்கப்பட்டிருந்தது. இதை கண்ட பாஜகவினர், பிரதமர் பேனர் இருக்க வேண்டிய இடத்தில் தமிழக முதல்வர் பேனரை வைத்துக்கொண்டு நீங்கள் முகாம் நடத்தினால் சரி வராது. எனவே, இங்கிருந்து கிளம்பி செல்லுங்கள் என கூறினர். இதையடுத்து, வேறு வழியில்லாமல் மருத்துவ பணியாளர்கள் அவசர அவசரமாக முகாமிற்காக வைக்கப்பட்டிருந்த மருந்து பொருட்களை எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.

இதனால் முகாமில் கலந்து கொண்ட முதியவர்கள் பலர் சரிவர மருத்துவ பரிசோதனை செய்ய முடியாமல் ஏமாற்றத்தோடு திரும்பி சென்றனர். கட்சி ரீதியாக அரசுகள் மாறுபட்டிருந்தாலும் மக்கள் நலன் சார்ந்த மருத்துவ முகாமை முழுமையாக நடத்த ஒத்துழைப்பு வழங்காமல் பாஜகவினர் இடையூறு அப்பகுதி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

  • Monalisa Bose viral at Kumbh Mela மகா கும்பமேளாவில் வைரலான இளம் பெண்…அழகில் மயங்கிய பிரபல இயக்குனர்…தட்டி தூக்கிய பாலிவுட்..!