வெளிநாட்டில் ரூ.5,000 கோடி முதலீடு.. அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு CM ஸ்டாலின் மறுப்பு தெரிவிக்காதது ஏன்..? பாஜக கேள்வி..!!

Author: Babu Lakshmanan
8 October 2022, 4:27 pm

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் அமெரிக்க பயணம் குறித்து சமூக வலைதளத்தில் பொய்யான தகவல்களை பரப்பியதாக திமுகவினர் உள்ளிட்ட 30 பேர் மீது பாஜக நிர்வாகிகள் சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளனர்.

சென்னை வேப்பேரியில் உள்ள பெருநகர காவல் ஆணையரகத்திற்கு பாஜகவின் மாநில துணை தலைவர் பால் கனகராஜ், மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் நிர்மல் குமார் ஆகியோர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் அமெரிக்க பயணம் குறித்து தனியார் வாராந்திர பத்திரிகை போன்று 5 ஆயிரம் கோடி யாருடைய பணம் என்று திமுகவினர் மற்று அவர்களது ஆதரவாளர்கள் 30பேர் தவறான தகவல் பரப்பி வருவதாக கூறி புகார் அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் நிர்மல் குமார் கூறுகையில் :- திமுக ஆட்சி மக்களுக்கு எதிரான ஆட்சி. திமுக அமைச்சர்கள் திமிராக பேசி வருகின்றனர். சமூக வலைதளத்தில் மாநில தலைவர் அண்ணாமலையின் அமெரிக்க பயணம் குறித்து திமுகவினர் பொய்யான குற்றச்சாட்டு பதிவு செய்து வருகின்றனர்.

எனவே, 30 பேர் கொண்ட திமுக மற்றும் அவரது ஆதரவாளர்கள் கொண்ட பெயர் பட்டியலை புகாராக கொடுத்து உள்ளோம். இவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுப்பதாக தெரிவித்துள்ளனர், எனக் கூறினர்.

முதல்வர் முக.ஸ்டாலின் வெளிநாடு சென்ற போது பாஜக விமர்சித்த கேள்விக்கு, அவருடன் குடும்பத்தினர், ஆடிட்டர் ஆகியோர் சென்றனர். அங்கு 5 ஆயிரம் கோடி முதலீடு செய்ததாக ஆதாரத்தின் அடிப்படையில் தான் மாநில தலைவர் அண்ணாமலை சொல்லி இருந்தார். ஆனால் முதல்வர் இதுவரை இதுகுறித்து மறுப்பு தெரிவிக்கவில்லை. அரசியல் ரீதியாக மட்டுமே கருத்துக்களை தெரிவித்து வருகின்றோம், என கூறினார்.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!