திமுகவுடன் கூட்டு சேர்ந்து பாஜக கவுன்சிலர் சதி… பறிபோன பதவி : பறந்த உத்தரவு!!!
Author: Udayachandran RadhaKrishnan8 March 2023, 5:46 pm
கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தோகைமலையில் அதிமுக ஒன்றியக் குழுத் தலைவர் லதா ரங்கசாமி என்பவரது பதவி நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் இன்று அதிரடியாக பறிக்கப்பட்டுள்ளது.
வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் திமுக கவுன்சிலர்கள் 11 பேருடன் பாஜக கவுன்சிலர் ஒருவரும் கூட்டு சேர்ந்து அதிமுக ஒன்றியச் சேர்மனுக்கு எதிராக வாக்களித்ததால் பரிதாபமாக பதவியை பறிகொடுத்துள்ளார் லதா ரங்கசாமி.
இந்த வாக்கெடுப்பு நடைபெற்ற போது தோகைமலை ஒன்றிய அலுவலகத்துக்கு சென்ற குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமர் உள்ளிட்டோர் கட்சியினருடன் சென்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அமைச்சர் செந்தில்பாலாஜியின் கவனத்துக்கு செல்லாமல் இந்த விவகாரம் நடந்திருக்க வாய்ப்பில்லை எனக் கருதப்படுகிறது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி திமுக ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் தங்கதனம் நேற்று அதிமுகவில் இணைந்த நிலையில், கரூர் மாவட்டத்தில் அதிமுக ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவரின் பதவி நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பறிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே இந்த விவகாரத்தை கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை விடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.