புதிதாக கட்சி தொடங்கியவர்கள்.. தமிழக அரசியலின் குப்பைகள்.. பாஜக கடும் தாக்கு!

Author: Hariharasudhan
21 February 2025, 5:55 pm

திராவிட மாடல் தலைவர்கள் முதல், புதிதாக கட்சி ஆரம்பித்தவர்கள் வரை தமிழகத்துக்கான மாற்றம் அல்ல, ஏமாற்றம் என்பதே உண்மை என பாஜக கூறியுள்ளது.

சென்னை: இது தொடர்பாக பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெண்களுக்கு எதிரான குற்றங்கள், மாணவர்கள், இளைஞர்களிடையே போதை கலாச்சாரம், கொலை, கொள்ளை என மக்கள் வாழ தகுதியற்ற மாநிலமாக தமிழகம் மாறிக் கொண்டிருக்கிறது.

தமிழக முதல்வர் ஸ்டாலினும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் திமுக அரசின் மீதான மக்கள் எதிர்ப்பை திசை திருப்ப ‘கெட் அவுட் மோடி’ என ஹேஸ்டேக் போட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். திராவிட மாடல் தலைவர்கள் முதல், புதிதாக கட்சி ஆரம்பித்தவர்கள் வரை தமிழகத்துக்கான மாற்றம் அல்ல. ஏமாற்றம் என்பதே உண்மை.

தமிழகத்தின் அரசியல் குப்பைகளாக செயல்படும் இந்த கட்சிகளை, தமிழக மக்கள் தங்கள் மனதில் இருந்து அப்புறப்படுத்தி விட்டார்கள். தமிழகத்தின் வளர்ச்சியை வேரறுக்கும் இந்த மக்கள் விரோத சக்திகளுக்கு தகுந்த பாடத்தை வருகின்ற 2026 சட்டப்பேரவை தேர்தலில் கற்பிக்க வேண்டும்.

TN BJP

இந்தி மொழியை திணிப்பதாக பிரதமர் மோடி மீது அவதூறு சுமத்தி, தமிழக மாணவர்களின் நலனை புறக்கணித்து கீழ்த்தரமாக அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். கலைக்கப்பட வேண்டிய திமுக ஆட்சியை, பெருந்தன்மையுடன் மோடி அரசு காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. திமுகவினரே திருந்துங்கள். இல்லையென்றால் திருத்தப்படுவீர்கள். கட்டாய ஆட்சி மாற்றத்துக்கு வழியை உருவாக்காதீர்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தாய்மொழி உச்சரிப்பு சரியாக இல்லை.. ரூ.1 லட்சம் சன்மானம் அறிவித்த அர்ஜுன் சம்பத்!

மும்மொழிக்கொள்கை எதிர்ப்பு: புதிய தேசியக் கல்விக்கொள்கையை ஏற்றால் நிதி விடுவிக்கப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் கூறியதற்கு, திமுக, அதிமுக, நாதக, தவெக உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். மீண்டும் இந்தித் திணிப்பு என்ற பதாகையையும் திமுகவினர் ஏந்தி உள்ளனர்.

இருமொழிக் கொள்கையே தங்களது நிலைப்பாடு என அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகள் கூறியுள்ளனர். இந்த நிலையில் தான், மும்மொழிக் கொள்கையில் இந்தித் திணிப்பு இல்லை என பாஜக தொடர்ந்து கூறி வருகிறது. இதனால், தமிழகத்தில் திமுக – பாஜக இடையே கடும் மோதலும் ஏற்பட்டுள்ளது.

  • siruthai siva direct new film after kanguva flop தோல்வியில் இருந்து உதித்து எழப்போகும் கங்குவா இயக்குனர்? அடுத்த படத்துக்கு ரெடி ஆகும் சிறுத்தை சிவா! அதுவும் இந்த நடிகர் கூட?