கோவையில் அண்ணாமலைக்கு ஆதரவாக இந்தியில் போஸ்டர் ; மாநகர காவல் ஆணையரிடம் த.பெ.தி.க. புகார்..!!!

Author: Babu Lakshmanan
29 March 2024, 10:10 pm

கோவையில் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் அண்ணாமலைக்கு ஆதரவாக இந்தியில் போஸ்டர் ஒட்டப்பட்டது குறித்து மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வாக்களர்களை ஈர்க்க வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கோவையில் வட இந்தியர்களை குறி வைத்து இந்தி மொழியில், தேர்தல் பிரச்சார வாசகங்களுடன் ரயில் நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

வட இந்திய ஒற்றுமை மன்றம் என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரில், சகோதர சகோதரிகளே, நீங்கள் அனைவரும் இம்முறை வட இந்தியக் கட்சிக்கு வாக்களிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றீர்கள். நமது குஜராத்தின் சிங்கம் மோடிஜிக்கு அண்ணாமலை முற்றிலும் விசுவாசமானவர். பிஜேபி ஜெயிக்கட்டும். இன்னும் சில நாட்களில் நமது மோடிஜி கோயம்புத்தூர், திருப்பூரையும், குஜராத்தையும் இணைப்பார்.

மோடி இருந்தால் அது சாத்தியம். இது ஒரு பொன்னான வாய்ப்பு. திராவிடக் கட்சியிலிருந்து இந்தியா விடுதலைக்காக அண்ணாமலைக்கு வாக்களிக்களியுங்கள். மோடிஜிக்காக வாக்களியுங்கள். நமது குஜராத்திற்காக வாக்களியுங்கள். உத்தரபிரதேசத்திற்காக வாக்களியுங்கள். ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் பாரத் மாதா கி ஜே என குறிப்பிடப்பட்டுள்ளது.

கோவையில் வட மாநில வாக்காளர்களை குறிவைத்து இந்தி மொழியில் பிரச்சார போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இதனிடையே போஸ்டர் ஒட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் புகார் மனு அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து பேசிய தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன், “அமைதியாக இருந்து வரும் கோவையை கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்து வருகின்றனர். ஏற்கனவே வட மாநிலத் தொழிலாளர்கள் எங்கேயோ அடித்து சண்டையிட்டதனை, கோவையில் வட மாநில தொழிலாளர்களை அடித்து துன்புறுத்தியதாக சமூக வலைத்தளத்தில் பழைய காட்சிகளை பகிர்ந்து, சமூக விரோதிகள் தமிழ்நாட்டு மக்கள் மீது அவப்பெயரை ஏற்படுத்தினர். மக்களிடையே பிளவுபடுத்துவதற்காக இது போன்ற இந்தி மொழியில் போஸ்டர் ஒட்டியுள்ளனர். தேர்தல் விதிமுறைகளை மீறி ஒட்டப்பட்ட போஸ்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்,” என தெரிவித்தார்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!