பாஜக பிரமுகர் மீது கொலைவெறி தாக்குதல்… பாஜக மாவட்ட தலைவர் கைது… 9 பேர் தலைமறைவு!!

Author: Babu Lakshmanan
11 May 2024, 12:52 pm
Quick Share

பாஜக பிரமுகர் மீதான கொலை வெறி தாக்குதலுக்கு முழு முதற் காரணமாக இருந்த திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் கைது செய்யப்பட்ட நிலையில், பாஜக மாவட்ட பொதுச் செயலாளர் உள்பட 9 பேர் தலைமறைவாகியுள்ளதாக திருவாரூர் எஸ் பி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே காவனூர் பகுதியைச் சேர்ந்தவர் மது என்ற மதுசூதனன். இவர் முன்னாள் பாஜக மாவட்ட விவசாய அணி தலைவர் பொறுப்பில் இருந்தவர். இவரை குடவாசல் அகரஓகை என்ற பகுதியில் இரு சக்கர வாகனத்தில் வந்த ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி தப்பி சென்றுள்ளனர்.

மேலும் படிக்க: சிறு சிறு தப்புக்கு எல்லாமா…? சார்பதிவாளர்களுக்கு பத்திரப்பதிவுத்துறையிடம் இருந்து வந்த அதிரடி உத்தரவு!!

உடனடியாக அக்கம்பக்கம் இருந்தவர்கள் அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மதுசூதனன் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த சில நாட்களாக மதுசூதனன் தனது சமூக வலைத்தள பக்கங்களில் பாஜகவினர் மீது குற்றச்சாட்டுகளை கூறி பதிவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, தாக்குதலுக்கு உள்ளான மதுசூதனன் மனைவி ஹரிணி, பாஜக மாவட்ட நிர்வாகிகள் தனது கணவனை தாக்கியதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், இது குறித்து குடவாசல் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்ட பாஜக மாவட்ட விளையாட்டு பிரிவு தலைவர் ஜெகதீசன் மற்றும் அவரது கூட்டாளி சரவணன் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்ததாவது, உள்கட்சி பிரச்சனையால் கொலை வெறி தாக்குதல் நடைபெற்ற சம்பவத்தில் 24 மணி நேரத்திற்குள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த கொலை வெறி தாக்குதலுக்கு முழுமுதற் காரணமாக இருந்தது திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர் மற்றும் திருவாரூர் மாவட்ட பாஜக பொதுச் செயலாளர் செந்தில் அரசன் ஆகியோர் என தெரியவந்துள்ளது.

மேலும் இவருடன் எட்டு பேர் கொண்ட கும்பல் இந்த செயலில் ஈடுபட்டுள்ளது. இவர்கள் தற்போது தலைமறைவாகியுள்ளனர். தலைமறைவாகியுள்ளவர்களை கண்டுபிடிப்பதற்காக நான்கு தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகிறோம். கூடிய விரைவில் அனைவரையும் கைது செய்வோம், என உறுதி அளித்தார்.

Views: - 281

0

0