கூடலூரில் குவிந்த பாஜகவினர் : டான்டீ நிர்வாகத்தை மூடுவதை கண்டித்து அண்ணாமலை தலைமையில் இன்று போராட்டம்..!!

Author: Udayachandran RadhaKrishnan
20 November 2022, 11:01 am

இலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட இந்திய தமிழ் குடும்பங்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில், நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, குன்னூர், கூடலூர், பந்தலூர் பகுதிகளில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர். மேலும் அவர்களின் வாழ்வாதரத்திற்காக டான்டீ நிர்வாகமும் உருவாக்கப்பட்டது.
அவர்கள் அந்த தொழிலை நம்பியே வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் கூடலூர், குன்னூர், கோத்தகிரி, கோவை மாவட்டம் வால்பாறை பகுதிகளில் பராமரிப்பு இல்லாத தேயிலை தோட்டங்களை தமிழ்நாடு தோட்ட கழகம்(டான்டீ) வனத்துறைக்கு ஒப்படைத்ததுடன், ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் வீடுகளை காலி செய்யும்படி நோட்டீசும் ஒட்டியுள்ளது.

மேலும் டான்டீ நிறுவனத்தின் பரிந்துரைகளை ஏற்று, நிலங்களை மீண்டும் வனத்துறையிடம் ஒப்படைப்பதற்கு அரசு அரசாணையும் வெளியிட்டுள்ளது. அரசின் இந்த முடிவால் இந்த தொழிலை நம்பி இருந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இதற்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

அ.தி.மு.க சார்பில் சில தினங்களுக்கு முன்பு வால்பாறையில் உண்ணாவிரத போராட்டமும் நடந்தது. இந்தநிலையில் டான்டீ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரியும், தமிழ் குடும்பங்களை மீண்டும் அகதிகள் ஆக்குவதை கண்டித்தும் பா.ஜ.க சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்து இருந்தார்.

அதன்படி நீலகிரி மாவட்டம் கூடலூர் புதிய பஸ் நிலையம் அருகே இன்று பிற்பகலில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசுகிறார்.

ஆர்ப்பாட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி மற்றும் கோவை பகுதியை சேர்ந்த பா.ஜ.க நிர்வாகிகள், தொண்டர்கள் என திரளானோர் கலந்து கொள்ள உள்ளனர். இதற்காக அவர்கள் கூடலூர் பகுதியில் குவிந்த வண்ணம் உள்ளனர். போராட்டத்திற்கான ஏற்பாடுகளை நீலகிரி மாவட்ட பா.ஜ.கவினர் செய்து வருகின்றனர்.

பா.ஜ.க போராட்டத்தையொட்டி கூடலூர் நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 491

    0

    0