லாவண்யா குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும் : தமிழக அரசுக்கு எச்.ராஜா வலியுறுத்தல்
Author: kavin kumar23 January 2022, 7:02 pm
சென்னை : தற்கொலை செய்துகொண்ட மாணவி லாவண்யா குடும்பத்திற்கு தமிழக அரசு 1 கோடி ரூபாய் உடனடியாக வழங்க வேண்டும் என எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் அருகே 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி லாவண்யா மற்றும் அவரது பெற்றோரை, கடந்த 2 ஆண்டுகளாக சிரியர் ராக்லின் மேரி விடுதி வார்டன் சகாயமேரி ஆகியோர் மதமாற்றம் செய்ய கட்டாயப்படுத்தியதாகவும், பள்ளியில் புல் வெட்டுதல் கழிவறை சுத்தம் செய்யும் பணியை செய்ய மாணவியை வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்நிலையில் மாணவி தங்கியிருந்த விடுதி வார்டன் சகாயமேரி போலீசாரால் கைது செய்யப்பட்டார். தஞ்சை மருத்துவக் கல்லூரியில் 15ஆம் தேதி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட மாணவி 19ஆம் தேதி மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மாணவியின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜகவினர் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் செய்ததோடு தஞ்சையில் சாலை மறியலும் செய்தனர். நேற்றுதான் லாவண்யாவின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மதமாற மறுத்ததால் கழிவறை கழுவ கடுமையான பணிகள் செய்ய உததரவிடப்பட்டு துன்புறுத்தலின் காரணமாக தற்கொலைக்கு ஆளான லாவண்யாவிற்கு நியாயம் கிடைக்க வேண்டும். தமிழக அரசு அந்த குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் உடனடியாக வழங்க வேண்டும்.’ என பதிவிட்டுள்ளார்.