அன்று அமைச்சர் நேருவின் தம்பிக்கு நடந்த கதி.. இன்று திருச்சி சிவாவுக்கு நடக்கப்போகுதா..? பகீர் கிளப்பிய எச்.ராஜா..!!

Author: Babu Lakshmanan
22 March 2023, 6:22 pm

திமுக என்றாலே வன்முறை கட்சி என்று அனைவருக்கும் தெரியும் என்றும், அவர்களுக்குள்ளேயே வன்முறை கலாச்சாரத்தை கையாளுவதாக என கோவில்பட்டியில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் மத்திய பாரதிய ஜனதா ஒன்பதாம் ஆண்டு கால சாதனை விளக்க மற்றும் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணன் கோயில் திடலில் பாரதிய ஜனதா கட்சி வடக்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். இக்கூட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது :- திமுக என்றாலே வன்முறை கட்சி என்று அனைவருக்கும் தெரியும். அவர்களுக்குள்ளேயே வன்முறை கலாச்சாரத்தை கையாளுகின்றனர். திருச்சி சிவாவால் அவரது வீட்டுக்குள்ளேயே பாதுகாப்பாக இருக்க முடியவில்லை. நேருவின் தம்பிக்கு நடந்தது போல் சிவாவுக்கும் நடக்குமா என்ற கேள்வி எழுகிறது. தமிழ்நாட்டில் ஒரு பாஜககாரர் கூட உயிரோடு இருக்க முடியாது என்று பேசிய ஆர்.எஸ்.பாரதியை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என்று தெரியவில்லை.

ஸ்டாலினுக்கு நிர்வாகம், கட்சி, குடும்பம் என எதன் மீதும் கட்டுப்பாடு இல்லை. இந்த மாதிரியான பரிதாபகரமான நிலை. தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறை குறித்து பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை. கடந்த பட்ஜெட்டில் 2718 புதிய பேருந்துகள் வாங்கப்படும் என்றனர். அது குறித்து எந்த தகவலும் இல்லை. ஆனால் இந்த பட்ஜெட்டில் புதிதாக ஆயிரம் பேருந்துகள் வாங்கப்படும். 500 பழைய பேருந்துகள் புதுப்பிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

கடந்த பட்ஜெட்டில் அறிவித்த 500 மின் பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என்பதும் இதுவரை நடைமுறைக்கு வரவில்லை. இது மக்களை ஏமாற்றுகின்ற பட்ஜெட். திமுகவுக்காக ஜாக்டோ ஜியோ உழைத்தனர். ஆனால் அவர்களின் கோரிக்கையை திமுக நிறைவேற்றவில்லை. அதேபோல் மகளிர் உரிமைத் தொகைக்கு 7000 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது 60 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு மட்டும் கொடுக்கலாம். இதுவரை அதற்கான தகுதி என்ன என்பது குறித்தும் அறிவிக்கவில்லை. அப்படி என்றால் திமுககாரர்கள் குடும்பத்துக்கு மட்டும் கொடுக்கப் போகிறார்களா?.

இலவச திட்டங்களால் தான் தமிழ்நாட்டில் கடன் சுமை அதிகரித்துள்ளது. பாஜகவை பொருத்தவரை ஒரு நிர்வாகியை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்றால் மாநில ஒழுங்கு கட்டுப்பாட்டு குழுவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. கூட்டணி என்பது கட்சியின் வளர்ச்சிக்கு தடை அல்ல என அடல் பிகாரி வாஜ்பாய் கூறியுள்ளார்.

திமுகவுக்கு தமிழ் மீது அக்கறை கிடையாது. இவர்கள் மக்களை ஏமாற்றி வருகின்றனர். தேர்தல்களில் உள்ள ஊழல்களை களைய வேண்டும். அதற்காக அண்ணாமலை சில கருத்துக்களை கூறியுள்ளார். இது தொடர்பாக கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் பேசியதாக சில கருத்துக்கள் வெளியே வந்தன. அதற்கும் அவர் தெளிவாக பதில் அளித்துள்ளார். கூட்டணி முடிவு குறித்தும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

தேர்தலில் வாக்குக்கு பணம் வழங்குவது 2006ஆம் ஆண்டுக்கு பின்னர் திருமங்கலம் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் திமுக தொடங்கி வைத்தது. அவர்களது ஆட்சியின்போது நடந்த 5 தொகுதி இடைத்தேர்தல்களிலும் வெற்றி பெற்றனர். அதன் பின் 2011-ல் நடந்த பொதுத் தேர்தலில் அதே தொகுதிகளில் திமுகவால் வெற்றி பெற முடியவில்லை. பணம் கொடுப்பதால் மக்கள் செல்வாக்கை நிலை நிறுத்த முடியும் என்பதை அனைத்து கட்சியினரும் கைவிட வேண்டும். அண்ணாமலை இளமையான தலைவர். அவர் துடிப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவர் ராஜினாமா செய்து விட்டார் என்பது போன்ற தகவல்கள் பொய்யானது, இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது பாஜக வடக்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன், முன்னாள் மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, நகர தலைவர் சீனிவாசன் உள்ளிட்ட கட்சியினர் உடன் இருந்தனர்.

  • High Court Orders Sivaji Ganesan House Auction நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு – உண்மையென்ன?