கடந்த 10 மாதங்களாக காக்கிச்சட்டை போட்டவர்கள்தான் நீதிபதிகளாக செயல்படுகின்றனர்… போலீசாரை விமர்சித்த எச்.ராஜா..!!
Author: Babu Lakshmanan17 March 2022, 10:18 pm
தமிழகத்தில் கடந்த 10 மாதங்களாக காவல்துறை அதிகாரிகள் நீதிபதிகள் போன்று செயல்படுவதாக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே தும்பைப்பட்டியில் கடந்த 7ஆம் தேதி உயிரிழந்த சிறுமியின் இல்லத்திற்குச் சென்று ஆறுதல் கூறுவதற்காக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ஹெச். ராஜா தும்பைப்பட்டி வந்தார். உயிரிழந்த சிறுமியின் தாயார் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
மேலும் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியளித்ததாவது :- சிறுமி காணாமல் போய் 14 நாட்கள் ஆகியும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காததால், அதே ஊரை சேர்ந்த நாகூர் ஹனிபா என்ற வாலிபரால் கடத்தி செல்லப்பட்டு வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இதில் அவர் தானாக எலிமருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டாரா, இல்லை விஷம் கொடுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்தும் முறையான விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் இந்த சிறுமியின் உயிரிழப்பில் காவல்துறையின் அலட்சியமே காரணம். இதுகுறித்து காவல்துறை ஆய்வாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை வருவதற்கு முன்பாக, தாமாகவே முன்வந்து அவர் எலி மருந்து சாப்பிட்டு உயிரிழந்ததாகவும், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என காவல் அதிகாரியே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். கடந்த பத்து மாதங்களாக தமிழகத்தில் காவல்துறை அதிகாரிகளே நீதிபதிகளை போன்று நடந்து கொள்கின்றனர்.
மேலும் நீதி கேட்டுப் போராடிய பொதுமக்கள் மீதும் காவல்துறையின் அராஜக போக்கை கையாண்டு தடியடி நடத்தியது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டும். இந்த சிறுமியின் உயிரிழப்பு குறித்து நேர்மையான முறையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்பதில் நம்பிக்கை இல்லை. அதனால் சிபிஐயிடம் விசாரணைக்கு பரிந்துரைக்குமாறு தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் வைக்கிறேன், எனக் கூறினார்.