இன்று ஒருநாள் மட்டும் உங்க வேலைகளை ஒத்தி வையுங்க… சென்னை மக்களுக்கு அண்ணாமலை விடுத்த வேண்டுகோள்!!

Author: Babu Lakshmanan
4 December 2023, 12:10 pm

சென்னையில் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுமாறு பாஜக தொண்டர்களுக்கு மாநில தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள X தளப்பதிவில் கூறியிருப்பதாவது ;- மிக்ஜாம் புயலின் காரணமாக, சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் இன்று இரவு வரை, கனமழையும், காற்றும் இருக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால், பொதுமக்கள் அனைவரும், தங்கள் பணிகள் அனைத்தையும் ஒரு நாள் ஒத்தி வைத்து, பத்திரமாக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

பொதுமக்களுக்கு உதவுவதற்காக, தமிழக பாஜக சார்பாக ஆங்காங்கே முகாம்கள் அமைக்கப்பட்டு, உணவு தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பாஜக சகோதரர்களும், நிர்வாகிகளும், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் முன்களப் பணியாளர்களுடன் இணைந்து, குழுவாகச் செயல்பட்டு, பொதுமக்களுக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், சென்னை வரும் ரயில்கள், மழை காரணமாக, புறநகர் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிகிறேன். ரயில் பயணிகளுக்குத் தேவையான உதவிகளையும் இயன்ற வரையில் செய்து தர
பாஜக சகோதரர்களைக் கேட்டுக் கொள்கிறேன். பொதுமக்கள் அனைவரும் இந்தக் கடினமான நேரத்தில் மிகக் கவனத்துடன், பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன், என தெரிவித்துள்ளார்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!