கொலை மிரட்டல் விடுத்த பாஜக பிரமுகர் தலைமறைவு.. தருமபுரம் ஆதீன மடத்திற்கு 24X7 துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
4 March 2024, 9:18 am

கொலை மிரட்டல் விடுத்த பாஜக பிரமுகர் தலைமறைவு.. தருமபுரம் ஆதீன மடத்திற்கு 24X7 துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனம் மடம் பழமை வாய்ந்த சைவ மடம் ஆகும். இந்த மடத்தின் 27-வது ஆதீனமாக மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் உள்ளார்.

இந்த நிலையில் தருமபுரம் ஆதீனம் தொடர்பான ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ இருப்பதாக சிலர் மிரட்டல் விடுத்துள்ளனர். இதுதொடர்பாக மடாதிபதியின் சகோதரரும், தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான திருக்கடையூர் தேவஸ்தான கணக்காளருமான விருத்தகிரி என்பவர் மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகார் மனுவில், தஞ்சை மாவட்டம் ஆடுதுறையை சேர்ந்த வினோத்(வயது 32), மடாதிபதியின் உதவியாளர் செந்தில் ஆகியோர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டும், நேரில் சந்தித்தும் ஆதீன மடாதிபதியின் ஆபாச வீடியோ, ஆடியோ தங்களிடம் உள்ளதாகவும், இதை சமூக வலைதளங்கள் மற்றும் டி.வி. சேனல்களில் வெளியிடாமல் இருக்க பணம் தர வேண்டும் என்றும் மிரட்டினர்.

மேலும் என்னை கழுத்தை நெரித்து கொலை செய்யவும் முயற்சி செய்தனர். அத்துடன் தங்கள் சார்பில் திருவெண்காட்டை சேர்ந்த விக்னேஷ்(33) என்பவர் தொடர்பு கொள்வார் என்றும் என்னிடம் தெரிவித்தனர்.

இதற்கு செம்பனார்கோவிலை சேர்ந்த தனியார் கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு(39), மயிலாடுதுறை மாவட்ட பா.ஜனதா தலைவர் அகோரம், மதுரையை சேர்ந்த வக்கீல் ஜெயச்சந்திரன், செம்பனார்கோவில் தி.மு.க. மத்திய ஒன்றிய செயலாளர் அமிர்த விஜயகுமார் ஆகியோர் தூண்டுதலாக இருந்துள்ளனர். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த புகாரின் அடிப்படையில் சிறப்பு படை போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், மிரட்டல் விடுக்கப்பட்டது தெரிய வந்தது.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத், விக்னேஷ், குடியரசு, தஞ்சை மாவட்டம் நெய்குப்பை கிராமத்தை சேர்ந்த ஸ்ரீநிவாஸ்(28) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

விக்னேஷ், சீர்காழி ஒன்றிய பா.ஜனதா முன்னாள் தலைவர் ஆவார். கைதான 4 பேரும் மயிலாடுதுறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் நீதிமன்ற காவலில் மயிலாடுதுறை கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கு தொடர்பாக பா.ஜனதா மாவட்ட தலைவர் அகோரம், தி.மு.க. ஒன்றிய செயலாளர் அமிர்த விஜயகுமார், ஆதீனத்தின் உதவியாளர் செந்தில், வக்கீல் ஜெயச்சந்திரன், பிரபாகரன் ஆகிய 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், போலி வீடியோ மிரட்டல் விவகாரத்தை தொடர்ந்து தருமபுரம் ஆதீன மடத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய 2 போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!