ஆட்டு மந்தைகளுடன் பாஜகவினரை அடைத்து வைத்த போலீஸ்.. மதுரையில் சர்ச்சை!
Author: Udayachandran RadhaKrishnan3 January 2025, 4:02 pm
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதி கேட்கும் பேரணி நடைபெறுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்த நிலையில் மதுரை மாநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் ஏற்பாட்டில் மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள செல்லத்தம்மன் கோவில் முன்பு பாஜக மகளிர் அணி மாநிலத் தலைவர் உமா ரதி மற்றும் நடிகையும் பாஜக மகளிர் அணி உறுப்பினருமான குஷ்பூ தலைமையில் பேரணியாக செல்ல முற்பட்டனர்.
அதில் பாஜக மாநில மகளிரணி தலைவர் உமா ரதி, குஷ்பூ ஆகியோர் கைது செய்யப்பட்டு சிம்மக்கல் பகுதியில் உள்ள ஆயிரம் வீட்டு யாதவ ஆடு வியாபாரிகள் ஆட்டு மகமை கட்டளை திருமண மண்டபத்தில் ஆடுகள் அடைத்து வைக்கப்பட்டன. அதன் அருகே நூற்றுக்கணக்கான பாஜக மகளிரணியினரும் அடைத்து வைக்கப்பட்டனர்.
அந்த இடத்தில் 200க்கும் மேற்பட்ட ஆடுகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளன நிலையில், தொடர்ந்து ஆடுகள் சப்தமிட்டு வருவதோடு ஆடுகளின் கழிவுகள், துர்நாற்றம் வீசுவதால் பாஜக நிர்வாகிகள் சிரமம் அடைந்து தங்களை வேறொரு இடத்திற்கு மாற்ற கோரிக்கை வைத்தனர்.
தொடர்ந்து, ஆடுகள் சத்தத்தால் மகளரிணி நிர்வாகிகள் தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கமிடுவதில் சிரமம் ஏற்பட்டது. ஆடுகள் அடைத்துள்ள மண்டபத்தில் பாஜக மகளிர் அணியினரை அடைத்துள்ள நிலையில் வேறு இடம் கேட்டு பாஜக மகளிர் அணியினர் காவல்துறையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படியுங்க: சாலையோரம் நடந்து சென்ற பெண் மீது பல்டி அடித்து மோதிய கார் : நெஞ்சை பதற வைத்த வீடியோ!
தங்களை பழிவாங்கும் செயலில் காவல்துறையினர் இதுபோன்று அடைத்து வைத்ததாகவும் தங்களது போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் இதுபோன்று நடவடிக்கையில் காவல்துறையினர் செய்ததாகவும் குற்றம் சாட்டினர்.
பாஜக மகளிர் அணியினர் அடைத்து வைக்கப்பட்டுள்ள மண்டபங்களில் கழிப்பறை உள்ளிட்ட எந்த வசதிகளும் இல்லை என பாஜக நிர்வாகிகள் தொடர்ச்சியாக கூறிய நிலையில் மேற்கொண்டு 300க்கும் மேற்பட்ட ஆடுகளை வியாபாரிகள் அழைத்து வந்து குஷ்பு கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்ட மண்டபத்தில் மீண்டும் 300க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் அழைத்து செல்லப்பட்டு அடைக்கப்பட்டது. அப்போது பாஜகவினருக்கும் ஆட்டு வியாபாரிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.