போராட்டத்தில் குதித்த மக்களிடம் கருத்து கேட்க சென்ற அமைச்சர் பொன்முடி : பாஜகவினர் குறுக்கிட்டதால் பரபரப்பு… வெளியேற்றியதால் பதற்றம்!

Author: Udayachandran RadhaKrishnan
17 December 2023, 4:00 pm

போராட்டத்தில் குதித்த மக்களிடம் கருத்து கேட்க சென்ற அமைச்சர் பொன்முடி : பாஜகவினர் குறுக்கிட்டதால் பரபரப்பு… வெளியேற்றியதால் பதற்றம்!

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசூர், இருவல்பட்டு பேரங்கியூர், பெரியசெவலை, ஆனத்தூர் உள்ளிட்ட 25 ஊராட்சிகள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இணைக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதற்கு 25 கிராம ஊராட்சிகளிலும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இன்று கள்ளக்குறிச்சியுடன் 25 கிராம ஊராட்சிகள் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வீடுகளில் கருப்பு கொடி ஏந்தி இன்று எதிர்ப்பினை தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி மாவட்ட ஆட்சியர் பழனி அரசூர் பகுதிக்கு சென்று அரசூர் கூட்டு சாலையில் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் போராட்டக் குழு முன்பாக 25 கிராம மக்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.

அப்போது பாஜகவினர் அமைச்சரிடம் பல கேள்விகளை எழுப்பினர். அப்போது அங்கிருந்த காவல்துறையினர் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் பொழுது சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து பேட்டியளித்த அமைச்சர் பொன்முடி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 25 ஊராட்சிகள் விழுப்புரம் மாவட்டத்தில் தொடரும் என்றும் அந்த ஊராட்சிகள் கள்ளக்குறிச்சியோடு இணைக்கப்படாது என்று அறிவித்தார்.

மேலும் திருவென்னைய்நல்லூரை புதிய தொகுதியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை வைத்துள்ளதால் தொகுதி சீரமைப்பு என்பது அது தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் எனவும் அமைச்சர் பொன்முடி கூறினார். அமைச்சரின் இந்த அறிவிப்பை வரவேற்கும் விதமாக சாலையில் கிராம மக்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?