வெறும் வருமானம் ஈட்டுவதே மட்டுமே திமுகவின் நோக்கம் : பாஜக தேசிய இணைப் பொறுப்பாளர் குற்றச்சாட்டு
Author: Babu Lakshmanan23 August 2022, 5:41 pm
விருதுநகர் ; மத்திய அரசு தமிழகத்திற்கு மட்டும் ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் கோடி வழங்கியுள்ளதாக தமிழக பாஜக தேசிய இணைப் பொறுப்பாளர் சுதாகரரெட்டி தெரிவித்துள்ளார்.
பாஜகவில் மண்டல அளவிலான கருத்தாய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அனைத்துப் பிரிவு நிர்வாகிகளுடனும் தமிழக பாஜக தேசிய இணைப் பொறுப்பாளர் சுதாகரரெட்டி ஆலோசனை நடத்தி வருகிறார். விருதுநகரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒவ்வொரு பகுதியிலும் உள்ள மக்கள் பிரச்சினைகளை கேட்டறிவதோடு, மத்திய அரசின் திட்டங்கள் குறித்தும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக கூறினார்.
மேலும், கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தி வருவதாகக் கூறிய அவர், மாநிலத் தலைவர் அறிவித்தபடி இல்லம் செல்வோம், உள்ளம் வெல்வோம் என வீடுவீடாகச் சென்று மக்களைச் சந்தித்து வருவதாகவும், பாஜகவினர் மீது திமுகவும், காவல்துறையும் பழிவாங்கும் நோக்கில் செயல்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டினார்.
பல மாவட்டங்களில் பாஜகவினர் மீது வழக்குப் பதிவுசெய்து, கைது செய்யும் நடவடிக்கைகளை திமுக அரசு மேற்கொண்டுள்ளது என்றும், மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாக திமுக உள்ளது, இதுதான் திராவிட மாடலா என கேள்வி எழுப்பினார்.
502 தேர்தல் வாக்குறுதிகளில் திமுக சில வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றியுள்ளதாகவும், திட்டங்களை அறிவித்து வருமானம் ஈட்டும் முயற்சியில்தான் திமுக உள்ளது, என்றார். குடும்ப அரசியல்தான் தமிழகத்தில் நடக்கிறது என்றும், மதுக்கடைகள் தான் இங்கு அதிகம் திறக்கப்படுகின்றன எனவும் , நாட்டின் பெருமையை உலகறியச் செய்துள்ளவர் பிரதமர் மோடி என்றும் நாட்டில் பாதுகாப்புத்துறை பல மடங்கு வலுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மக்களுக்கு 2 ஆயிரம் கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றும், தமிழகத்திற்கு மட்டும் ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் கோடி மத்திய அரசு வழங்கியுள்ளது. ஆனால், எந்த அரசு அலுவலகத்திலும் பிரதமர் மோடி படம் வைக்கப்படவில்லை என்றார். தமிழக அரசு மக்களுக்காக செய்த செலவுகளை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும், கொடுத்த வாக்குறுதியில் எத்தனை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன, எத்தனை செயல்படுத்தப்பட வில்லை என்ற விவரத்தையும் தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.