திமுக, காங்கிரசை கண்டிக்க தைரியம் இருக்கா..? பதவிக்காக கொள்கையை காற்றில் பறக்க விடுவீர்களா? திருமாவளவனுக்கு பாஜக கேள்வி..!!
Author: Babu Lakshmanan9 February 2024, 7:56 pm
பெரியாருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.
கடந்த 4ம் தேதி பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்ட நிலையில், மேலும் 3 பேருக்கு பாரத ரத்னா விருதை மத்திய அரசு இன்று அறிவித்தது. அதாவது, முன்னாள் பிரதமர்கள் சரண் சிங், பி.வி நரசிம்ம ராவ் மற்றும் பசுமை புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படும் எம்.எஸ் சுவாமிநாதன் ஆகியோருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்த நிலையில், விமர்சனங்களையும் எதிர்கட்சிகள் முன்வைத்து வருகின்றன. அந்த வகையில், தந்தை பெரியாருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள X தளப்பதிவில் கூறியிருப்பதாவது :- பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார், சமூகநீதி காவலர் வி.பி.சிங், கான்சிராம் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்” என்னும் கோரிக்கையை நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளேன்!,” என தெரிவித்திருந்தார்.
அவரது இந்தப் பதிவுக்கு பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில்,”நீங்கள் குறிப்பிட்டுள்ள மூவருக்கும், 10 வருடங்கள் ஆட்சியில் இருந்த உங்கள் கூட்டணி கட்சிகளான திமுக மற்றும் காங்கிரஸ் ஆட்சியில் பாரத ரத்னா விருது அளிக்காததை வன்மையாக கண்டிப்பீர்களா? சமூக நீதிக்கு எதிரானவர்கள் என்று கண்டனம் செய்வீர்களா?
கூட்டணியை விட்டு வெளியேறுவீர்களா அல்லது வழக்கம் போல், பதவிக்காக, அதிகாரத்திற்காக இந்த மூவரையும் மறந்து கொள்கையை காற்றில் பறக்க விடுவீர்களா?,” என தெரிவித்துள்ளார்.