அண்ணாமலை போட்ட கிடுக்குப்பிடி… வேறுவழியில்லாமல் சரண்டாகிய முதலமைச்சர் ஸ்டாலின் ; எச்.ராஜா விமர்சனம்..!!
Author: Babu Lakshmanan27 October 2022, 4:13 pm
புதுக்கோட்டை ; பாஜக தலைவர் அண்ணாமலையின் கிடுக்கி பிடியால்தான் வேறு வழியின்றி முதலமைச்சர் ஸ்டாலின், என்ஐஏ விசாரணைக்கு உத்தரவிட்டதோடு, கோவையில் நடந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
தாய்மொழி தமிழுக்கு முடிவுரை எழுத நினைக்கும் திமுக அரசை கண்டித்து புதுக்கோட்டையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன போராட்டம் நடைபெற்றது. இதில் பாஜக தேசிய குழு சிறப்பு அழைப்பாளர் எச் ராஜா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் எச் ராஜா பேசியதாவது :- அமித்ஷா தலைமையிலான நடந்த கூட்டத்தில் எடுத்த முடிவு A கேட்டகிரியில் உள்ள மாநிலங்களுக்கு மட்டுமே பொருந்தும். தமிழகம் சி கேட்டகிரியில் உள்ளது. ஆகையால் மத்திய அமைச்சர் எடுத்த முடிவு தமிழகத்திற்கு பொருந்தாது.
இதனை சாக்காக வைத்துக் கொண்டு தமிழ் மொழியை அழிக்கும் திராவிட கும்பல் சட்டமன்றத்தில் பொய் பேசுகிறது.
முதல்வரின் பொய் பேச்சு திமுக அரசு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வருவதற்கு உகந்தது. இயக்குனர் கௌதமன் பேசிய பேச்சு மிகவும் கண்டிக்கத்தக்கது. 67 திரும்பி கொண்டு வருவதற்கான முயற்சியை திமுக எடுக்கிறது. ஆனால் அது முடியாது.
அப்போது மக்கள் திமுக கூறியதை நம்பினார்கள். ஆனால் தற்போது மக்கள் விழித்துக் கொண்டு திமுகவின் பித்தலாட்டங்களை தெரிந்து கொண்டு விட்டனர். கோவையில் நடந்த சம்பவத்தை தொடர்ந்து நான்கு தினங்களாக தமிழக முதல்வர் சம்பவம் குறித்து ஏன் வாய் திறக்கவில்லை.
திமுக தனது வாக்கு வங்கியை தக்க வைப்பதற்காக தான் தற்போது என்ஐஏ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. நாங்கள் எதுவும் செய்யவில்லை. என்ஐஏ தான் செய்தது என்று கூறி தப்பிப்பதற்காக தான். தமிழக முதல்வர் கோவை சம்பவத்தை என்ஐஏ விற்கு மாற்றியது வரவேற்கத்தக்கது.
பாஜக தலைவர் அண்ணாமலை கொடுத்த கிடுக்குபிடி அழுத்தத்தால் தான், தமிழக முதல்வர் வேறு வழியின்றி என்.ஐ.ஏ. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். நான்கு தினங்களாக முதல்வர் மௌனம் காத்தது ஏன்..? இந்த சம்பவத்தை நாங்கள் கண்டிக்கிறோம். இனி இந்த இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் கூறாதது ஏன்..?
நேற்று கோவையில் ஜமாத் கூட்டமைப்பினர் எடுத்துள்ள முடிவு வரவேற்கத்தக்கது. இருப்பினும் இந்து மக்கள் அச்சத்தில் உள்ளனர். அவர்களை அச்சத்தை போக்குவதற்கு நடவடிக்கை எடுக்காதது ஏன்..?
மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜமாத் கூட்டமைப்பு அழைத்து பேசியிருப்பது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், ஏன் இந்து அமைப்பினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி இது போன்ற சம்பவங்கள் இனி நடக்காது என்று ஏன் கூறவில்லை..? இதிலிருந்து பாரபட்சமான நடவடிக்கை தொடர்கிறது என்பதை காட்டுகிறது
பிஎஃப்ஐ தடை செய்த பின்னர் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் அதனை வரவேற்று இருக்க வேண்டும். அரசியல் லாபத்திற்காக யாரும் வாய் திறக்கவில்லை. பாஜக சார்பில் சட்டமன்றத்தில் 24 உறுப்பினர்கள் இருந்திருந்தால், ஸ்டாலின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்திருக்கும். ஏனென்றால், சட்டமன்றத்தில் ஹிந்தி திணிப்பு தொடர்பாக பொய்யான கருத்துக்களை கூறி தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்.
பாஜக அதிமுக உடன் தான் கூட்டணியில் உள்ளது. எந்த ஒரு அணியுடனும் அல்ல. கருத்தியல் ரீதியாக திமுகவை எதிர்த்து பாஜக களத்தில் உள்ளது. தமிழகத்தில் பாஜக வேகமாக வளர்ந்து வருகிறது, எனக் கூறினார்.