எய்ம்ஸ் செங்கலா? இங்க ஒரு செங்கல் கூட இல்லையே.. அடித்துச் சொல்லிய அண்ணாமலை!
Author: Hariharasudhan16 November 2024, 9:45 am
வெறும் ரூ.60 கோடி முதலீடு கூட இன்னும் தமிழகத்தை அடையவில்லை என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை திமுக அரசை கடுமையாக விமர்சித்து உள்ளார்.
சென்னை: இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டு உள்ள எக்ஸ் தளப் பதிவில், “ஆட்சிக்கு வந்ததில் இருந்து, வெற்று அறிவிப்புகள் மூலம் பொதுமக்களை ஏமாற்றுவதையே முழு நேரப் பணியாகச் செய்து வருகிறது திமுக அரசு. அதன் வரிசையில் இன்று (நவ.15), அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில், ரூ. 1,000 கோடி முதலீட்டில் காலணி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டியிருப்பதாக, முதலமைச்சர் பெருமைப்பட்டிருக்கிறார்.
கடந்த 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சிப்காட் தொழிற்பூங்காவில், தைவான் நாட்டைச் சேர்ந்த காலணி நிறுவனம், ரூ. 2,302 கோடி முதலீடு செய்வதாகப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதாக அறிவித்த திமுக அரசு, அதன் மூலம், 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் அறிவித்தது.
சுமார் 20 மாதங்கள் கடந்தும், அந்தத் தொழிற்சாலை கட்டுமானத்துக்காக, ஒரு செங்கல் கூட எடுத்து வைக்கப்படவில்லை என்று, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வியின் மூலம் தெரிய வந்துள்ளது. முதலமைச்சர் குடும்பத்துடன் துபாய் சுற்றுலா சென்று, ரூ. 6,000 கோடி முதலீடு ஈர்த்துள்ளோம் என்று கூறி ஆண்டுகள் இரண்டு ஆகின்றன.
வெறும் ரூ.60 கோடி முதலீடு கூட இன்னும் தமிழகத்தை அடையவில்லை. இது போன்ற வீண் நாடகங்களை இனியாவது நிறுத்தி விட்டு, தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்புக்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை முதலமைச்சர் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்து உள்ளார்.
முன்னதாக, அரியலூர் அடுத்த கொல்லாபுரம் கிராமத்தில் நேற்று (நவ.15) நடைபெற்ற விழாவில், ஜெயங்கொண்டம் அடுத்த மகிமைபுரம் கிராமத்தில் டீன்ஷூஸ் நிறுவனத்துக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ரூ.1,000 கோடி முதலீட்டில், 15,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் காலணி உற்பத்தி தொழிற்சாலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
இதையும் படிங்க: நானும் அப்போ உச்ச நடிகர் தான்.. வம்பிழுத்து பார்க்கும் சரத்குமார்!
இது தொடர்பான ஸ்டாலினின் எக்ஸ் தளப் பதிவைக் குறிப்பிட்டு, அண்ணாமலை இவ்வாறு கண்டனம் தெரிவித்து உள்ளார். மேலும், லண்டனில் சர்வதேச அரசியல் படிப்பிற்காகச் சென்றுள்ள அண்ணாமலை, வருகிற நவம்பர் 28ஆம் தேதி தமிழகம் திரும்ப உள்ளார்.