திமுகவுடன் ஒட்டிக்கொள்ள ஏமாற்று வேலையில் திருமாவளவன்… முழுக்க முழுக்க ஒதுக்கிய இந்து சமூகம் ; வேலூர் இப்ராகீம் அட்டாக்..!!
Author: Babu Lakshmanan8 November 2022, 2:48 pm
இந்து சமூகம் முழுக்கமுழுக்க திருமாவளவன் என்ற அயோக்கியனை ஓதுக்கி வைத்துவிட்டது என்று பாஜக சிறுபான்மை அணியின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராகீம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பழனியில் நடைபெற்ற திருமணத்திற்கு பாஜக சிறுபான்மை பிரிவின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் வருகை தந்தார். அப்போது திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது :- பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு செய்து மத்திய அரசு அறிவித்தது செல்லும் என உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை வரவேற்கிறேன். திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மத்திய அரசு உயர்சாதியினருக்கு ஆதரவாகவும், மற்ற சமூகங்களின் இட ஒதுக்கீட்டை பிடுங்குவது போலவும் தவறான பிரச்சாரத்தை செய்ததற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. இந்த 10 சதவிகித இட ஒதுக்கீடு என்பது பிராமணர்கள் மட்டுமல்லாமல் 40க்கும் மேற்பட்ட சமுதாயத்தை சேர்ந்த மக்கள் பயனடைவர்.
அதேபோல, பாஜகவும், மத்திய அரசும் சிறுபான்மை மக்களுக்கு எதிராக செயல்படுவதாக கூறும் திமுகவின் பொய் பிரச்சாரத்தை தமிழக மக்கள் புறக்கணிப்பார்கள். மத்திய சிறுபான்மை அமைச்சகத்தின் மூலமாக சிறுபான்மை மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை மத்திய அரசு செய்து வருகிறது. இதன்மூலம் லட்சக்கணக்கான சிறுபான்மை இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. தேர்வு எழுதவும், பெண்கள் கல்விக்கும் நிதிஉதவி கொடுப்பது என பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. சமநிலை பெற்ற சமூகநீதியை உருவாக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை பொருத்தவரை அரசியல் ஆதாயத்திற்காக, சிறுபான்மை மக்களின் வாக்குக்காக இஸ்லாமியர்களின் காவலன் வேடமும், கிறிஸ்தவர்களின் வாக்குக்காக கிறிஸ்தவர்களின் காவலன் வேடமும் போடுவார்.
இந்து விரோத கருத்துக்களை நாள்தோறும் தெரிவித்து இந்துக்களின் எதிரி என்ற நிலை உருவாகியுள்ளதால், இந்துக்களின் வாக்குக்காக தற்போது இந்துக்களின் நன்மைக்காக அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற நாடகத்தை அரங்கேற்றுவதற்காக மனு ஸ்மிருதியை இந்து மக்களுக்கு வழங்குவதாக கூறி திருமாவளவன் நாடகமாடுகிறார். இந்து சமயத்தை கேலியும், கிண்டலும் செய்யும் திருமாவளவனுக்கு இந்துமதத்தின் மீது நம்பிக்கை இல்லாதபோது, அவர் இந்துமதத்தை சீரமைக்கிறேன் என்று கிளம்பியுள்ளது நகைப்புக்கு உரியது.
ஏதாவது ஒன்றை செய்து திமுகவோடு ஒட்டிக்கொள்ளவே இதுபோன்ற ஏமாற்றுவேலையில் ஈடுபடுகிறார். இந்து சமூகம் முழுக்க முழுக்க திருமாவளவன் போன்ற அயோக்கியர்களை ஒதுக்கி வைத்துவிட்டது என்பதை வெளிப்படையாக தெரிவிக்கிறேன். பொதுமக்களை தொடர்ந்து அவதூறாக பேசும் திமுக அமைச்சர் பொன்முடியின் மகனுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்தில் பதவி கொடுத்துள்ளதன் மூலம் திமுக அமைச்சர்கள் பொதுமக்கள் மற்றும் பெண்களை அவதூறாக பேசுவது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிடித்துள்ளது என்பதை காட்டுகிறது.
எனவே திமுகவை பெண்கள் எதிர்க்க தயாராவார்கள். வரும் 2024நாடாளுமன்ற தேர்தலில் தேசம் முழுவதும் பாஜக தலைமையில் பல்வேறு கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கும். அந்த கூட்டணியில் தமிழகத்தில் அதிமுகவும் இணையும், என்று தெரிவித்தார்.