திமுக அரசுக்கு எதிராக ஒன்று கூடும் பாஜக… அண்ணாமலை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan14 October 2023, 9:09 pm
திமுக அரசுக்கு எதிராக ஒன்று கூடும் பாஜக… அண்ணாமலை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.1000 வழங்க கோரி விழுப்புரத்தில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
விழுப்புரம் பெருங்கோட்டத்திற்கு உட்பட்ட மாவட்டங்களில் 18ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 115-ஆவது பிறந்தநாளையொட்டி, குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அதன்படி, 1.06 கோடி பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி மகளிர் உரிமைத் தொகை பயனாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகளிர் உரிமை தொகைக்கு பெற பலவேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு, பிறகு தகுதி உள்ளவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதற்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் கடும் குற்றச்சாட்டு எழுந்தது.
தேர்தல் அறிக்கையில், அனைத்து குடும்ப தலைவர்களுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என திமுக அரசு அறிவித்துவிட்டு, தற்போது தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே உரிமைத்தொகை வழங்கப்படும் என தெரிவித்ததற்கு குற்றச்சாட்டப்பட்டது.
இதனால், அனைவருக்கும் 1000 ரூபாய் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனிடையே, தமிழக அரசு அறிவிப்பின் படி, மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க தவறியவர்கள், நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பித்து வருகின்றனர்.
இதுவரை 9 லட்சம் பேர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு மேல்முறையீடு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. 18ஆம் தேதி வரை மேல்முறையீடு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஏற்கனவே கடனில் உள்ள சூழலில் இதுபோன்ற திட்டங்கள் மேலும் கடன் சுமையை அதிகரிக்க வழிவகுக்கும் என்று மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த சமயத்தில், அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.1000 வழங்க கோரி விழுப்புரத்தில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.