பாஜக பெண் வேட்பாளரின் மண்டை உடைப்பு… வாக்கு சேகரித்து விட்டு வீடு திரும்பிய போது சோகம்
Author: kavin kumar8 February 2022, 2:38 pm
திண்டுக்கல் : நிலக்கோட்டை அருகே பாஜக பெண் வேட்பாளரின் மண்டை உடைத்த இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் நகர்ப்புற ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து தற்போது மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. பேரூராட்சியில் போட்டியிடும் அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தற்போது தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த பேரூராட்சியில் உள்ள 6 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு திமுக , அதிமுக, பாரதிய ஜனதா கட்சி, அம்மா மக்கள் முன்னேற்றம் என 4 பேர்கள் போட்டியிடுகின்றனர். இதனைத் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி சார்பாக பொம்மனம்பட்டி பகுதியைச் சேர்ந்த கருப்புசாமி மனைவி ராணி போட்டியிடுகிறார். இந்த நிலையில் நேற்றிரவு வாக்கு சேகரித்து விட்டு மீண்டும் தனது கணவருடன் காரில் வீட்டிற்கு திரும்பும் போது மர்ம நபர்கள் கற்களால் தாக்கியுள்ளனர். இதில் ராணியின் மண்டை உடைந்தது இதையடுத்து சிகிச்சைக்காக அம்மையநாயக்கனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் வீடு திரும்பினர்.
இரவு நேரத்தில் பெண் வேட்பாளர் மீது தாக்கிய மர்ம நபர்கள் மீது அம்மையநாயக்கனூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் படி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முக லட்சுமி வழக்குப்பதிவு செய்து பொம்மனம்பட்டியை சேர்ந்த நிதிஷ்குமார் மற்றும் பிரபாகரன் ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். இந்த வழக்கில் நிதிஷ்குமார் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறார். தப்பி ஓடிய பிரபாகரனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.