பதில் சொல்லுங்க.. பதறி ஓடிய அமைச்சர்.. சட்டென முடிந்த திமுக ஆர்ப்பாட்டம்!

Author: Hariharasudhan
29 March 2025, 7:35 pm

திமுகவின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் இனியும் நம்பப் போவதில்லை என பகிரங்கமாக கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

விருதுநகர்: விருதுநகர் அடுத்த பாலவநத்தம் என்ற கிராமத்தில், உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, இன்று (மார்ச் 29) கிராமசபைக் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. அதேநேரம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கு நிதி வழங்காத மத்திய அரசைக் கண்டித்து, திமுக சார்பில் வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள், திமுகவினர் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர். இதனையடுத்து, ஆர்ப்பாட்டம் நிறைவடையும் நேரத்தில் அப்பகுதியைச் சேர்ந்த மீனா என்ற பெண் எழுந்து, அமைச்சரிடம், “கிராம சபைக் கூட்டம் நடக்கும் இடத்தில் எதற்காக ஆர்ப்பாட்டம் நடத்துகிறீர்கள்?” எனக் கேள்வி எழுப்பினார்.

அதோடு, “மக்களை ஏன் திசைத் திருப்புகிறீர்கள்? மத்திய அரசு 36 ஆயிரம் கோடி ரூபாய் தமிழகத்துக்கு ஒதுக்கியுள்ளதே, பொதுமக்களாகிய எனது கேள்விக்கு அமைச்சராகிய நீங்கள் பதில் சொல்ல வேண்டும்” எனக் கேள்வி எழுப்பினார். மேலும், “விருதுநகர் மாவட்டத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தில் ஊழல் நடந்துள்ளது. அதற்கான புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

KKSSR Ramachandran Viral Video

புகாரை விசாரித்த பின்பு சம்பளம் வழங்குவார்கள். அதற்குள் மத்திய அரசை குறைகூறி ஒரு அமைச்சரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடலாமா?” என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினார். இதனை சற்றும் எதிர்பாராத அமைச்சர் ராமச்சந்திரன், அங்கிருந்து உடனடியாக புறப்பட்டுச் சென்றார்.

இந்த நிலையில், இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “இன்றைய தினம், விருது நகர் மாவட்டத்தில்,
கிராமசபைக் கூட்டம் என்று கூறி பொதுமக்களை வரச் சொல்லி, திமுக நடத்தும் போராட்ட நாடகத்தில் பங்கேற்க வைக்க முயற்சித்திருக்கிறார் திமுக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்.

அங்கிருந்த அருப்புக்கோட்டை பாஜக வடக்கு ஒன்றிய துணைத் தலைவர் சகோதரி மீனா, இது குறித்து அமைச்சரிடம் கேள்வி எழுப்பியதும், உடனடியாக அங்கிருந்து சென்றிருக்கிறார் அமைச்சர்.

இதையும் படிங்க: அதிமுகவை முந்தும் தவெக.. கூட்டணி கட்டாயத்தில் இரட்டை இலை? பரபரப்பு சர்வே!

கடந்த நான்கு ஆண்டுகளில், நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ், மத்திய அரசு நாட்டில் அதிகபட்சமாக தமிழகத்திற்கு, 39,339 கோடி ரூபாய் வழங்கியுள்ளதை தமிழக மக்கள் அறிவார்கள். தமிழகத்துக்கு அதிக நிதி வழங்கப்பட்டுள்ள விவரங்களை, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியிடம், மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெளிவாகக் கூறியிருக்கிறார். ஆனால், அந்த நிதி என்ன ஆனது என்பதைக் கூறாமல் மோசடி நாடகமாடிக் கொண்டிருக்கிறது திமுக.

தமிழகத்தில் நூறு நாள் வேலைத்திட்டத்தில் திமுக ஆதரவோடு நடக்கும் மோசடிகள் குறித்துப் பல முறை புகார் அளித்தும், தொடர்ந்து மோசடியில் ஈடுபடும் திமுகவின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் இனியும் நம்பப் போவதில்லை” எனக் குறிப்பிட்டு விமர்சித்துள்ளார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி
  • Leave a Reply