மனைவி, ரிசப்ஷனிஸ்ட் உடன் சேர்ந்து ரூ.17 லட்சம் அபேஸ்.. பாஜக பிரமுகரின் மோசடி வெளியானது எப்படி?
Author: Hariharasudhan20 February 2025, 1:01 pm
மனைவி, அலுவலக உதவியாளரின் உதவியுடன் வேலை வாங்கித் தருவதாக ரூ.17 லட்சம் மோசடி செய்த பாஜக பிரமுகரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை: சென்னை, பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர், பாலாஜி நகரில் உள்ள துரைக்கண்ணு தெருவைச் சேர்ந்தவர்கள் ஜெயராம் – அஸ்வினி தம்பதி. இதில், ஜெயராம், அதே பகுதியில் Young Sports of India என்ற பெயரில் அலுவலகம் ஒன்றை நடத்தி வருகிறார்.
மேலும், தான் ஒலிம்பிக் கமிட்டியின் உறுப்பினர் என்றும், சர்வதேச விளையாட்டுகளில் நடுவராக இருப்பதாகவும், ஜெயராம் தனக்குத்தானே விசிட்டிங் கார்டு தயார் செய்து வைத்துள்ளார். மேலும், தன்னை சந்திக்க வரும் நபர்களிடம், தான் பாஜகவில் முக்கிய பொறுப்பில் இருப்பதால், தனக்கு மத்திய அமைச்சர்கள் அனைவரும் மிக நெருக்கம் என்றும், அதனால் மத்திய அரசு வேலைகளை ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் நான் வாங்கித் தருவேன் என்றும் கூறி வந்துள்ளார்.
இந்த நிலையில், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த லோகேஷ் குமார் (32), ஜெயராமிடம் வேலை வாங்கித் தருமாறு கூறியுள்ளார். இதன்படி, அவரிடம் இருந்து பல்வேறு கட்டங்களாக 17 லட்சம் ரூபாய் வரை பெற்றுக் கொண்ட ஜெயராம், அவரது மனைவி அஸ்வினி மற்றும் அலுவலக உதவியாளர் பிரியா ஆகியோர், வேலை வாங்கிக் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளனர்.
ஆனால், பொறுமை இழந்த லோகேஷ் குமார் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார். அப்போது, அவர்கள் வேலைக்கான ஒரு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரை கொடுத்துள்ளனர். ஆனால், அது போலி நியமன ஆணை என்பது குறிப்பிட்ட இடத்துக்குச் சென்றபோது தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க: திராவிட மாடலும், காமராஜர் ஆட்சியும் ஒன்னா? தமிழக தலைமையை மாற்ற டெல்லியில் முகாம்!
எனவே, இது குறித்து ஜெயராமிடம் லோகேஷ் குமார் முறையிட்டுள்ளார். மேலும், தன்னிடம் வாங்கிய பணத்தை உடனடியாக திருப்பித் தருமாறும் கூறியுள்ளார். ஆனால், ஜெயராம், அவரது மனைவி அஸ்வினி மற்றும் உதவியாளர் பிரியா ஆகியோர் சேர்ந்து லோகேஷ் குமாரை மிரட்டியுள்ளனர்.
எனவே, இது குறித்து தாம்பரம் மாநகர காவல் ஆணையரிடம் லோகேஷ் குமார் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் சங்கர் நகர் போலீசார், நேற்று முன்தினம் (பிப்.18) ஜெயராம் கும்பலை விசாரணைக்காக தேடிச் சென்றபோது, அவர்கள் தலைமறைவானது தெரிய வந்தது. இதனையடுத்து, அவர்கள் மீது மோசடி வழக்குப் பதிவு செய்த போலீசார், அவர்களைத் தேடி வருகின்றனர்.