போகாத ஊருக்கு வழி தேடும் CM ஸ்டாலின் : பிரதமர் மீது பழி போடுவதா? போட்டு தாக்கிய அண்ணாமலை!
Author: Udayachandran RadhaKrishnan16 June 2024, 3:52 pm
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு 3 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் அதன் நிர்வாக தோல்விகளையும் ஆட்சியின் தோல்விகளையும் மறைத்து மக்களுக்கு தேவையே இல்லாத விஷயங்களை கொண்டாடுவதை திமுக வழக்கமாக கொண்டிருக்கிறது.
அது போன்ற ஒரு கொண்டாட்டம் (முப்பெரும் விழா) நேற்று நடந்த போதுதான் தமிழக முதல்வர் ஸ்டாலின், 40-க்கு 40 பெற்றதை தார்மீக வெற்றி என்றும் வரலாற்ற வெற்றி என்றும் தெரிவித்திருந்தார்.
துண்டு சீட்டில் பிறர் எழுதி கொடுப்பது உண்மையா என்று கூட தெரியாமல் முதல்வர் அப்படியே பேசி விடுகிறார். குஜராத் முதல்வராக இருந்த போதிலிருந்து பிரதமர் நரேந்திர மோடி அரசியலமைப்பு சட்டத்தின் மீது அதிக மதிப்பு கொண்டவர்.
ஆனால் அரசியலமைப்பை ஏதோ பிரதமர் இப்போதுதான் நினைவில் கொண்டு வணங்கியிருப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பது முரணானது.
பிரதமர் நரேந்திர மோடி அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை தலை வணங்க செய்ததே இந்தியா கூட்டணிதான் என்றும் முதல்வர் தெரிவித்திருந்தார். பிரதமர் மோடியின் வாழ்க்கை முறை குறித்தும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மீது அவர் கொண்டுள்ள மரியாதை குறித்தும் தமிழக முதல்வருக்கு நினைவூட்டுவது எனது கடமையாகும். ஆனால் இந்தியா கூட்டணிக்கு அந்த அரசியலமைப்பு சட்டம் என்பது வெறும் துண்டு காகிதம்தான். அதனால்தான் எப்போது இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் அரசியலமைப்புக்கு எதிராகவே செயல்படுகிறார்கள்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணி , நாடு முழுவதும் சந்தர்ப்பவாதிகள், வாரிசுகள், ஊழல்வாதிகள் நிறைந்த ஒரு அமைப்பாகும்.
அவர்கள் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு பாஜக மட்டும் தனித்து பெற்ற இடங்களை கூட 13 கட்சிகளை கொண்ட கூட்டணியால் மொத்தமாக வாங்க முடியவில்லை. 13 கட்சிகளை கொண்ட இந்தியா கூட்டணி மொத்தமாக 232 தொகுதிகளில் வென்றுள்ளது.
ஆனால் பாஜக தனித்து 240 தொகுதிகளில் வென்றுள்ளது. இந்த எண்ணை கூட இந்தியா கூட்டணியால் நெருங்க முடியவில்லை. போகாத ஊருக்கு வழி தேடுவது என்ற ஒரு பழமொழி தமிழில் உள்ளது. அது போன்றதொரு உலகில் முதல்வர் ஸ்டாலின் தனது தார்மீக வெற்றியை வைத்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார். தப்பு செய்த குற்றவாளிகள் தெருக்களில் சுதந்திரமாக அலைந்து கொண்டிருக்கும் நிலையில் முதல்வர் ஸ்டாலினோ, சமூகவலைதள பதிவுகளுக்காக நள்ளிரவில் கைது செய்வது வாடிக்கையாகிவிட்டது.
மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களை அமல்படுத்தாத போதே முதல்வர் ஸ்டாலின் அரசியல் சாசனத்தை முற்றிலும் அலட்சியப்படுத்துவது தெரிகிறது.
புதிய காரணங்களை கூறி கொண்டாடுவதற்கு பதில் கடந்த பல ஆண்டுகளாக தமிழக மக்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் அக்கறை காட்டாத தமிழக முதல்வர் ஸ்டாலின், தற்போதாவது அதில் அக்கறை செலுத்தினால் தமிழகம் நன்றாக இருக்கும். இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.