நூல் தயாரிக்கும் ஆலையில் பாய்லர் வெடித்து பயங்கர தீ விபத்து : மளமளவென பற்றி எரியும் தீயை அணைக்க போராட்டம்..!!
Author: Udayachandran RadhaKrishnan28 November 2022, 9:56 am
பழனி அருகே திண்டுக்கல் திருப்பூர் மாவட்ட எல்லை பகுதியான சாமிநாதபுரம் பகுதியில் செயல்பட்டு வருகிறது வெங்கடேஸ்வரா பேப்பர் மில் மற்றும் நூற்பாலை நிறுவனம்.
இந்த நிறுவனத்தின் ஒரு பிரிவாக செயல்பட்டு வருகிறது. நூல்களுக்கு சாயம் ஏற்றும் பிரிவு ஆலை. இன்று காலை 7 மணி அளவில் பாய்லர் பிரிவு பகுதியில் வைக்கப்பட்டிருந்த ஆயில்களில் தீ பிடிக்கத் தொடங்கியது.
இதைப்பார்த்த பணியாளர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் ஆயில் என்பதால் தீயை அணைக்க முடியாது என தெரிந்தவுடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பணியில் இருந்த பணியாளர்கள் அனைவரும் விரைவாக வெளியேறினர் மற்ற பணியாளர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில் ஆயிலில் தீப்பற்றி எரியத்துவங்கிய தீயானது வேகமாக மளமளவென பரவி அருகிலுள்ள பாய்லரில் தீப்பிடித்தது. சில நிமிடங்களில் பயங்கர சத்தத்துடன் பாய்லர் வெடித்தது.
இதைதொடர்ந்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பழனி தீயணைப்புத் துறையினர் உடனடியாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பழனியில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த ஆலையில் சுமார் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செயல்பட்டதால் சேதம் எதுவும் ஏற்படவில்லை.