பாம்பு போல் உடலில் தோல் உரியும் விநோத நோய் பாதிப்பில் சிறுவன் : தமிழக அரசின் உதவிக்காக கண்ணீருடன் காத்திருக்கும் பெற்றோர்!!

Author: Udayachandran RadhaKrishnan
9 February 2022, 2:08 pm

திருப்பூர் : தோல் சம்பந்தபட்ட நோயால் அவதியுறும் எட்டு வயது சிறுவனுக்கு சிறந்த மருத்துவம் வேண்டி ஏழை பெற்றோர் கண்ணீர் கோரிக்கையை விடுத்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், வேடச்சந்தூர் அருகேயுள்ள தொட்டனம்பட்டியை பிரேம்குமார். தனது உறவுக்கார பெண்ணான ஜெயசித்ராவை திருமணம் செய்த பிரேம்குமார் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, திருப்பூர் கருவம்பாளையத்தில் வசித்து வருகிறார்.
இவர்களுக்கு கெளசல்யாதேவி (வயது 11) என்ற மகளும், பொன்குமரன்(வயது 8) என்ற மகனும் உள்ளனர். பொன்குமரன் பிறக்கும்போதே தோல் நோய் பாதிப்புடன் பிறந்துள்ளான்.

தலை முதல் கால் வரை தோலானது உதிர்ந்து கொண்டே இருக்கும். மேலும் உடல்சத்து குறைபாடு உள்ளதால் எட்டு வயதிலும் மூன்று வயது சிறுவன் போன்ற உடல் வளர்ச்சிதான் உள்ளது.

மேலும் தனியாக நடமாட முடியாமலும் உள்ளான். பொன்குமரனின் பெற்றோர்கள் பிறந்ததிலிருந்து, அவனது தோல் நோய் சரியாக வேண்டி தமிழகத்திலுள்ள பெரும்பாலான மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொண்டனர். மருத்துவர்களுக்கும் பொன்குமரனின் பாதிப்பு குறித்து முழுமையாக அறிந்து கொள்ள முடியவில்லை.

மேலும் ஆயுர்வேதம், சித்தா என அனைத்து மருத்துவ முறைகளையும் முயன்று பார்த்தவர்கள், பொன்குமரன் குணமடைய கோயில்களுக்கும் சென்று வந்துள்ளனர். இருப்பினும் தோல்நோய் குணமாகவில்லை.

இதுகுறித்து பொன்குமரனின் தாயார் ஜெயசித்ரா கூறுகையில், பொன்குமரன் பிறந்த போதே தோல் நோய் பாதிப்புள்ளதாகவும், தோலானது தொடர்ந்து உதிர்ந்து கொண்டே இருக்கும் காரணத்தால், தான் உடனிருந்து கவனிக்க வேண்டிய காரணத்தால், தனது கணவர் வேலைக்கு செல்வதால் குடும்பத்தில் மிகவும் வறுமையான சூழல் உள்ளதாகவும், மருத்துவத்திற்கே பெரும்பகுதி செலவாகிவிடுவதாகவும், வட்டிக்கு கடன் வாங்கி மருத்துவ செலவுகளை செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் கோடை காலம் வந்து விட்டால் தோல் வறண்டு உதிர்வதால் அவனது உடல் முழுவதும் எரிச்சலாக இருப்பதால் இரவு முழுவதும் விழித்திருந்து உடலை தடவியும், எண்ணெய் தேய்த்தும் பார்த்து கொள்வோம் என்றும், நன்றாக படிக்கும் திறன் இருந்தும் பள்ளி சென்றால் உடல் உபாதைகளுக்கு தனியாக செல்ல முடியாத காரணத்தால் வீட்டிலேயே வைத்து பார்த்து வருவதாகவும் கண்ணீர் மல்க வருத்தம் தெரிவித்தார்.


பொன்குமரன் தந்தை பிரேம்குமார் கூறும்போது, தனது மனைவி கர்ப்ப காலத்தில் பாம்பின் ஆன்மாவால் ஏற்பட்ட பாதிப்பில்தான் பொன்குமரனுக்கு இவ்வாறு நேர்ந்துள்ளதாகவும், இதனால் பல கோயில்களுக்கு சென்று வந்தும், அனைத்து வைத்திய முறைகளையும் லட்சகணக்கான செலவில் பார்த்தும் குணமடையவில்லை எனவும் வருத்தம் தெரிவித்த அவர், பொன்குமரனுக்கு சிறந்த மருத்துவமளிக்க தமிழக அரசு உதவ வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

தங்களது மகன் என்னவென்று அறிந்து கொள்ள முடியாத தோல் நோயினால் பாதிக்கப்பட்டு வருவதை காண சகிக்காத ஏழை பெற்றோர் தமிழக அரசின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

  • Nayanthara disrespecting Allu Arjun viral video பிரபல தெலுங்கு நடிகரை அசிங்கப்படுத்திய நயன்தாரா..வைரலாகும் வீடியோ..தனுஷை கொண்டாடும் ரசிகர்கள்..!
  • Views: - 1697

    0

    0