Boycott Vadakkans.. தமிழ்நாடா? வடநாடா? நடிகர் விஜய் சேதுபதி ரசிகர்கள் செய்த சம்பவத்தால் பரபரப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan1 February 2023, 10:56 am
இது தமிழ்நாடா? வடநாடா என்ற கேள்வியுடன் அபாயம் எனவும் அச்சிடப்பட்டு ஒட்டப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக ரயிலில் வடமாநில தொழிலாளர்கள் சாரை சாரையாக வந்து சென்னை ரயில்நிலையத்தில் இறங்கி செல்வது போன்ற வீடியோ வெளியாகிய நிலையில் தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் வருகை அதிகரிப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்துவருகின்றன.
இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பாக திருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் தமிழக தொழிலாளர்களை விரட்டி விரட்டி தாக்குவது போன்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்திற்கு எதிராக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் வேல்முருகன் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.
இதேபோன்று இந்த தாக்குதல் சம்பவத்தை கண்டித்து காமெடி நடிகர் மதுரை முத்து ஆதங்கத்தை வெளியிட்டார். இதனிடையே வடமாநில தொழிலாளர்கள் ஆதிக்கம் அதிகளவிற்கு இருப்பதாகவும், இதனால் தமிழக தொழிலாளர்களின் வாழ்வாதரமே முடங்கிவிட்டதாகவும் சமூகவலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் கருத்துகளை பதிவிட்டுவருகின்றனர்.
இந்நிலையில் மதுரையில் நடிகர் விஜய்சேதுபதியின் ரசிகர்கள் சார்பில் அகில இந்திய சங்குத்தேவன் விஜய் சேதுபதி ரசிகர்கள் என்ற பெயரில் மதுரை மாநகர் முழுவதுமாக அபாயம் # Boycott Vadakkans என்ற எச்சரிக்கை வாசகங்கள் அச்சிடப்பட்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
மேலும் அந்த போஸ்டரில் இது தமிழ்நாடா? வடநாடா ? விழித்துக்கொள் தமிழா என்ற வாசகங்களும் இடம்பெற்றுள்ளன.
வடமாநில தொழிலாளர்களின் வருகைக்கு எதிராக நடிகர் விஜய் சேதுபதி ரசிகர்களின் மதுரை முழுவதிலும் ஒட்டியுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.