ஆழ்துளை கிணற்று பள்ளத்தில் விழுந்த சிறுவர்கள் பலி…! புதுச்சேரியில் நடந்த சோக சம்பவம்…
Author: kavin kumar8 February 2022, 9:10 pm
புதுச்சேரி : புதுச்சேரி அருகே ஆழ்துளை கிணற்று பள்ளத்தில் விழுந்த 2 சிறுவர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி வில்லியனூர் அருகே உள்ள பெரம்பை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். கொத்தனாராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி இனித்தா. இவர்களுக்கு லெவின் என்கிற நான்கு வயது மகனும், லோகித் என்கிற மூன்று வயது மகனும் உள்ளனர். இந்த நிலையில் இன்று மாலையில் விளையாடி சென்ற இரண்டு சிறுவர்களும் வெகு நேரமாக வீடு திரும்பவில்லை. இதையடுத்து பெற்றோர் சிறுவர்கள் தேடியுள்ளனர்.
அப்போது இருவரும் வீட்டுக்கு பின்புறம் உள்ள காலி நிலத்தில் போர் போடப்பட்டு அதிலிருந்து வெளியான சேர் கலந்த நீர் பள்ளத்தில் தேங்கி நின்றிருந்தது. அந்த பள்ளத்தில் உள்ள சேற்றில் விழுந்து இரண்டு சிறுவர்களும் மூச்சற்ற நிலையில் இருந்தனர். இதையடுத்து அருகில் உள்ளவர்கள் உதவியுடன் அவர்களை மீட்டு புதுச்சேரி வில்லியனூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்ற போது இரண்டு சிறுவர்களும் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் ஆரோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரண்டு சிறுவர்கள் போர் போடப்பட்ட பகுதியிலிருந்த சேற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பம் மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் இடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது. உயிரிழந்த இரண்டு சிறுவர்களின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.