செங்கல் சூளையில் ஏற்பட்ட கரும்புகை.. அதிகாலையில் சடலமாக கிடந்த கணவன் – மனைவி ; நிர்கதியான 3 குழந்தைகள்…!!

Author: Babu Lakshmanan
20 September 2023, 9:55 am

வேலூர் அருகே செங்கல் சூளையில் ஏற்பட்ட புகையினால் மூச்சு திணறல் ஏற்பட்டு கணவன், மனைவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் கணியம்பாடி அடுத்த புதூர் பகுதியை சேர்ந்தவர்கள் தெய்வசிகாமணி (40), அமுல் (30) தம்பதியினர். இவர்களுக்கு சந்தியா, சினேகா, அரவிந் என மூன்று பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் பழனிவேல் என்பவருக்கு சொந்தமான இடத்தில் செங்கல் சூளை வைத்து நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு செங்கல் சூளையை பற்ற வைத்து விட்டு வெளியில் உறங்கிக் கொண்டிருந்ததாகவும், திடீரென கனமழை பெய்ததால் செங்கல் சூளையை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த கொட்டகைக்கு உள் இருவரும் தங்கியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலை உறவினர்கள் சென்று பார்த்த போது இருவரும் சடலமாக கிடந்துள்ளனர். செங்கல் சூளை அடுப்பு எரிந்து கொண்டிருக்கும்போது, கொட்டகைக்கு உள் தங்கியதால் மழை காரணமாக அதிகமான புகை ஏற்பட்டு, அதனால் உறக்கத்திலேயே மூச்சு திணறி இருவரும் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், இவர்கள் நடத்தி வந்த செங்கல் சூளைக்கு உரிய அனுமதி உள்ளதா..? இல்லையா..? என்றும் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து வருகின்றனர்.

உயிரிழந்த இருவரின் உடலை மீட்ட வேலூர் தாலுக்கா காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், உயிரிழந்த தம்பதியினரின் சொந்த வீடு கூட இல்லாத நிலையில் ஏழ்மை நிலையில் இருப்பதால், அவர்களின் மூன்று பிள்ளைகளுக்கு அரசு உதவ வேண்டும் என்றும் உறவினர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தாய், தந்தையை இழந்து வாடும் மூன்று பேரின் கண்ணீர் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  • Kannada superstar Shivrajkumar cancer recovery நான் உயிரோட இருக்க காரணம் என் மனைவி தான்…நடிகர் சிவராஜ்குமார் உருக்கமாக பேசிய வீடியோ வைரல்..!
  • Views: - 368

    0

    0