அண்ணன் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை: சொத்துக்காக தம்பி செய்த கொடூரம்…மதுரையில் பரபரப்பு..!!
Author: Rajesh23 April 2022, 12:32 pm
மதுரை: மேலூர் அருகே சொத்து பிரச்சனை காரணமாக, போஸ்ட் மேனான அண்ணனை வெட்டி கொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழவளவை சேர்ந்த ஜெகநாதன் என்பவருடைய மகன் ராஜீவ்காந்தி. இவர் கீழவளவில் உள்ள தபால்நிலையத்தில் போஸ்டமேனாக பணிபுரிந்து வரும் நிலையில், இவருக்கும் இவரது தம்பியான கார்த்திக் என்பவருக்கும், சொத்து குறித்தும், கொடுக்கல் வாங்கல் தொடர்பாகவும் பிரச்சனை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் இன்று இருவருக்கும் வீட்டில் இருந்த போது இது தொடர்பாக இருவருக்குள்ளும் பிரச்சனை ஏற்பட்ட நிலையில், இதில் ஆத்திரமடைந்த கார்த்திக் வீட்டில் இருந்த அரிவாளால் ராஜீவ்காந்தியை தலை, கழுத்து, கை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ராஜீவ்காந்தி இரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த மேலூர் சரக துணை கண்காணிப்பாளர் பிரபாகரன், மேலூர் காவல்துறை ஆய்வாளர் சார்லஸ் தலைமையில் கீழவளவு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உயிரிழந்த ராஜீவ்காந்தி உடலை கைப்பற்றி உடற்கூறய்விற்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இக்கொலை சம்பவம் தொடர்பாக, கார்த்திக்கை கைது செய்ததுடன், கொலைக்கு பயன்படுத்திய அரிவாளை பறிமுதல் செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.