குடும்பத் தகராறால் மைத்துனரை படுகொலை செய்த வழக்கு : தந்தை – மகனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
18 April 2022, 10:14 pm

திண்டுக்கல் : முன்பகை காரணமாக மைத்துனரை படுகொலை செய்ம வழக்கில் தந்தை மற்றும் மகனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி பரபரப்பு தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் கிழக்கு ராமநாதபுரத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 29). இவர் அதே பகுதியைச் சேர்ந்த வீரபாண்டி என்பவரின் தங்கை பவானியை கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார்.

கண்ணனுக்கும் பவாணிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. இதனையடுத்து பவாணி கணவனிடம் கோபித்துக் கொண்டு தனது அண்ணன் வீரபாண்டி வீட்டுக்கு சென்றார்.

இதனை அடுத்து வீரபாண்டி தனது மைத்துனரான கண்ணனிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்த கடந்த 06.06.20 அன்று மருதாணி குளம் முருகன் கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கு வீரபாண்டிக்கும் கண்ணனுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்படுகிறது.

அப்பொழுது கண்ணனின் தந்தை துரைசிங்கம் (வயது 63) வீரபாண்டியை பிடித்துக்கொள்ள கண்ணன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வீரபாண்டியை தலை, கை, கால், கழுத்து என பல இடங்களில் வெட்டினார்.

இதில் படுகாயமடைந்த வீரபாண்டியை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் வீரபாண்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுதொடர்பாக திண்டுக்கல் மேற்கு காவல் நிலைய போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து தந்தை துரைசிங்கம் மகன் கண்ணன் ஆகியோரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு திண்டுக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி ஜமுனா பரபரப்பு தீர்ப்பு வழங்கினார். அதில் தந்தை-மகன் இருவருக்கும் ஆயுள் தண்டனையும் தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். இதனையடுத்து குற்றவாளிகள் இரண்டு பேரும் மதுரை மத்திய சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

  • 150 நடிகைகளுடன் தனுஷ்… சரமாரியாக தாக்கும் சுசித்ரா..!
  • Views: - 1206

    0

    0