சாதிமறுப்புத் திருமணம் செய்த அக்காவை நடுரோட்டில் வெட்டிக் கொன்ற தம்பி.. ஹைதராபாத்தில் கொடூரம்!
Author: Hariharasudhan2 December 2024, 12:43 pm
ஹைதராபாத்தில் மாற்று சமூகத்தைச் சேர்ந்த நபரை திருமணம் செய்த தனது போலீஸ் அக்காவை நடுரோட்டில் வெட்டிக் கொன்ற தம்பி போலீசில் சரண்டைந்தார்.
ரங்காரெட்டி: தெலுங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டம் ராயபோலு கிராமத்தைச் சேர்ந்தவர் நாகமணி. இவர் கடந்த 2020ஆம் ஆண்டு முதல் போலீஸ் கான்ஸ்டபிளாக பணியில் இருந்து வந்தார். தற்போது ஹைதராபாத், ஹயத் நகர் காவல் நிலையத்தில் இவர் பணிபுரிந்து வருகிறார்.
மேலும், நாகமணியின் பெற்றோர் இறந்த நிலையில், அவரது தம்பி பரமேஷ் உடன் வசித்து வந்தார். அதேநேரம்,, நாகமணிக்கு திருமணமாகி அடுத்த சில ஆண்டுகளில் கணவரைப் பிரிந்த நிலையில், அவரது சொந்த ஊரைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பவரைக் காதலித்து வந்து உள்ளார்.
ஆனால், ஸ்ரீகாந்த் மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், இவர்களது காதலை நாகமணியின் தம்பி பரமேஷ் ஏற்க மறுத்து உள்ளார். அது மட்டுமல்லாமல், ஸ்ரீகாந்த் உடன் பழுகுவதை நிறுத்தும்படி கூறி வந்துள்ளார். ஆனால் நாகமணி அதனை ஏற்க மறுத்து உள்ளார்.
மெலும், ஸ்ரீகாந்த் உடன் நவம்பர் 1ஆம் தேதி யாதகிரிகுட்டாவில் வைத்து நாகமணி திருமணமும் செய்து கொண்டு, ஹைதராபாத் ஹயத் நகரில் வசித்து வந்து உள்ளார். இந்த நிலையில், நேற்று விடுமுறை என்பதால் சொந்த கிராமத்திற்குச் சென்ற நாகமணி, மாமியார் வீட்டில் இருந்து இன்று காலையில் பணிக்குச் செல்வதற்காக தனது பைக்கில் புறப்பட்டு உள்ளார்.
இதையும் படிங்க: ஊத்தங்கரையை உலுக்கிய கனமழை.. ஏரிகளில் வெள்ளம்.. ஸ்தம்பித்த போக்குவரத்து
இதனைப் பார்த்த பரமேஷ், காரில் பின் தொடர்ந்து சென்று ராய்ப்பூர் அருகே காரால் முதலில் நாகமணி பைக்கிற்கு பின்னால் இடித்துள்ளார். இதில் நாகமணி நிலைதடுமாறி பைக்குடன் கீழே விழுந்துள்ளார். பின்னர், பரமேஷ் தான் கொண்டு வந்த கத்தியால் நாகமணியின் கழுத்தை வெட்டிக் கொன்றார். இதனையடுத்து, பரமேஷ் போலீசில் சரணடைந்தார். இது குறித்து ராய்ப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.