எரிந்த நிலையில் இளைஞர் சடலம் : எமனாக வந்த நண்பர்கள.. அதிர வைத்த அதிர்ச்சி சம்பவம்!
Author: Udayachandran RadhaKrishnan15 June 2024, 2:23 pm
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சோழபுரம் பேரூராட்சி, அய்யாநல்லூர் கிராமம், காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விவசாயி தம்பிதுரை என்பவரின் மகன் கோகுல் (25) கும்பகோணத்தில் தனியார் மருந்தகத்தில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த 12ம் தேதி இரவு மருந்தகத்திற்கு இரவு நேர பணிக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு சென்றுள்ளார்.
பின்னர் மறுநாள் வரை வீட்டிற்கு வராததால் அதிர்ச்சியான குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கோகுலை தேடி உள்ளனர்.
ஆனால் எங்கு தேடியும் கிடைக்காததால் சோழபுரம் போலீஸ் நிலையத்தில் 13ம் தேதி இரவு புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் வழக்கு பதிந்து போலீசார் தேடி வந்த நிலையில் இன்று காலை கோவிலாச்சேரி ஊராட்சி, பழவாற்றங்கரை அருகே உள்ள சுடுகாட்டில் மர்மமான முறையில் கோகுல் கொலை செய்து எரிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளார்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த சோழபுரம் போலீசார் மற்றும் தஞ்சாவூர் தடயவியல் நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் கோகுல் சடலமாக கிடந்த சுடுகாட்டில் சோதனை செய்து வருகின்றனர்.
மேலும் கோகுல் செல்போனை சோதனை செய்த போலீசார் கடைசியாக பேசிய அவரது நண்பர்கள் இரண்டு பேரை போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்ததில் கோகுலின் நெருங்கிய நண்பரான அரியலூர் மாவட்டம் கஞ்சன் கொள்ளை பகுதியைச் சேர்ந்த சேகர் மகன் பிரேம்குமாரின் சகோதரியை கோகுல் காதலித்து வந்ததாகவும் இதற்கு பிரேம்குமார் மற்றும் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் பிரேம்குமார் மற்றும் அவரது நண்பரான அரியலூர் மாவட்டம் கஞ்சன் கொள்ளை பகுதியைச் சேர்ந்த குமார் மகன் ஆகாஷ் சேர்ந்து கோகுலை அடித்து எரித்து கொன்றுள்ளது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர் சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.