பேருந்து நிழற்குடையை ஆக்கிரமித்த திமுக பிரமுகர்… சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்… போலீசாருடன் தள்ளுமுள்ளு..!!

Author: Babu Lakshmanan
9 July 2022, 12:14 pm

கரூர் அருகே பேருந்து நிழற்குடையை திமுக பிரமுகர் ஆக்கிரமிப்பு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

கரூர் அடுத்த வடக்கு பாளையம் பகுதியில் பேருந்து நிழற்குடை ஒன்று கடந்த திமுக ஆட்சியில் கட்டப்பட்டது. மேலும் இந்த நிழற்குடையை 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு செல்பவர்கள், அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லும் கர்ப்பிணி பெண்கள், நோயாளிகள், பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் ஆகியோர் நகர பேருந்திற்கு செல்வதற்காக பயன்படுத்தி வந்தனர். கொளுத்தும் வெயிலுக்கும், அடிக்கும் மழைக்கும் இந்த நிழற்கூடை அங்கே உபயோகமாக இருந்துள்ளது.

இந்தப் பேருந்து நிழற்குடை இருக்கும் இடத்திற்கு பின்புறம் திமுக தாந்தோணி இளைஞர் அணி அமைப்பாளர் திருமூர்த்தி என்பவர் இல்லம் அமைந்துள்ளது. மேலும், பேருந்து நிறுத்தத்திற்கு பின்னால் இருக்கும் காலி இடத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பேருந்து நிழற்குடை இருக்கும் இடம் தனக்கு சொந்தமானது என்று கூறி, கடந்த மாதம் 21-ஆம் தேதி இரவோடு இரவாக ஜேசிபி இயந்திரம் கொண்டு தரைமட்டமாக இடித்து அகற்றியது.

இந்த செயலுக்கு அப்போதே எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள், பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் தலையிட்டு பேசியதில், இடிக்கப்பட்ட நிழற் குடையை மீண்டும் கட்டித் தருவதாக உறுதியளிக்கப்பட்டது.

ஆனால் தற்போது வரை நிழல் குடையை கட்டி தராததால் பொதுமக்கள் காலை கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 2 மணி நேரமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் சாலை மறியலில் அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை போலீசார் தாக்கிய சம்பவத்தில் பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதோடு, அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து கரூர் வட்டாட்சியர் பன்னீர்செல்வம் பொதுமக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதனைத் தொடர்ந்து சர்வேயர் சம்பந்தப்பட்ட திமுக நிர்வாகி இடத்தை அளந்தனர். ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது உறுதியானதாக கூறப்பட்ட நிலையில், பேருந்து நிழற்குடை ஏற்கனவே இருந்த இடத்தில் மீண்டும் கட்டித் தரப்படும் அதிகாரிகள் வாக்குறுதி அளித்தனர். இதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதுமட்டுமில்லாமல், பேருந்து நிழற்குடையை திமுக பிரமுகர் இடிக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது பெருமளவில் வைரலாகி வருகின்றது.

  • prabhu deva strict practice for his dancers inn shooting spot பிரபுதேவாவால் பெண்டு கழண்டுப்போன டான்சர்கள்- இவ்வளவு ஸ்ட்ரிக்ட்டான ஆளா இவரு?