50 வருடங்களுக்கு முன் மூதாட்டியிடம் திருடிய ரூ.37.50 பணம்.. ₹3 லட்சமாக திருப்பி கொடுத்த தொழிலதிபர்!
Author: Udayachandran RadhaKrishnan11 December 2024, 4:15 pm
இலங்கையின் நுவரெலியா மாவட்டத்தில் மஸ்கெலிய அருகே அலகொல பகுதியில் அமைந்திருக்கும் ஒரு தேயிலை தோட்டத்தில் பணியாற்றியவர்கள் சுப்பிரமணியம் – எழுவாய் தம்பதியினர்.
1970 காலகட்டத்தில் அவர்கள் வேறு இடத்துக்கு குடி பெயரும் போது, அவர்களின் வீட்டருகில் இருந்த, தேயிலை தோட்ட தொழிலாளிகளான பழனிச்சாமி – மாரியம்மாள் தம்பதியின் மகனான 15 வயது சிறுவன் ரஞ்சித்தை உதவிக்கு அழைத்தனர்.
அப்போது வந்த சிறுவன் ரஞ்சித் வீட்டு உபயோக பொருட்களை எடுத்து வைத்து வந்த போது, தலையணைக்கு கீழ் ஒரு பொட்டலம் இருந்ததனை பார்த்தார் .
அந்த பொட்டலத்தை பிரித்து பார்த்தபோது இருந்த 37.50 ரூபாய் அந்த தம்பதியிடம் தரமால் திருடிவிட்டார். வறுமை பிடியில் இருந்த அந்த கால கட்டத்தில் அது பெரும் தொகை. அந்த தொகை குறித்து எழுவாய் ரஞ்சித்திடம் கேட்டபோது தனுக்கு தெரியாது என தெரிவித்திருக்கின்றார்.
பின்னர், எழுவாய் பாட்டி அங்குள்ள கோயிலுக்கு சென்று ஈடு (கடவுளிடம் முறையிடுவது) போட்டுள்ளார் . அதே கோயிலுக்கு சென்ற ரஞ்சித், பணத்தை திருடியது தான் என்றும், தன்னை ஒன்றும் செய்து விடாதே என்று வேண்டியுள்ளார்.
வறுமையில் வாடும் குடும்பத்தில் பிறந்த ரஞ்சித் 2ம் வகுப்பு மட்டுமே படித்த நிலையில், தமிழ்நாட்டுக்கு வந்து பிழைத்துக் கொள்ளலாம் என நினைத்திருக்கின்றார். அதன்பிறகு பிறகு எழுவாய் பாட்டி வீட்டில் திருடிய பணம், அவர் வீட்டில் இருந்த நகை உள்ளிட்டவற்றோடு, சிறுவனாக இருந்த ரஞ்சித் 1977 கால கட்டத்தில் இலங்கையிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்திருக்கின்றார்.
2ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள ரஞ்சித், சிறிய பெட்டிக்கடை வைத்து நட்டமடைந்து நடுத்தெருவுக்கு வந்தார் . பிறகு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் வேடந்தாங்கல் பறவையாக பயணித்து மூட்டை தூக்குதல், வீட்டு வேலை செய்வது, ஓட்டல் வேலை செய்வது என பல வேலைகளை செய்துள்ளார் .
கடைசியாக 40 ஆண்டுகளுக்கு முன் கோவைக்கு வந்த இவர் சிறிய கேட்டரிங் சர்வீசை ஆரம்பித்திருக்கின்றார் . பின்னர், படிப்படியாக உயர்ந்த இவர் தற்போது ரஞ்சித் பிளசிங் கேட்டரிங் என்ற பெயரில் 100க்கும் மேற்பட்டோருக்கு வேலை தந்து வருகின்றார்.
இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் உடல் நல குறைவால் அவதிப்பட்ட ரஞ்சித், பைபிள் படித்திருக்கின்றார் . அதில் “துன்மார்க்கர்கன் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாமல் போகிறான். நீதிமான் இறங்கிச் சென்று திரும்பக் கொடுக்கிறான்” வசனம் அவரின் வாழ்வில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியிருக்கின்றது.
தான் வாங்கிய கடன்கள், கடைகளில் பொருட்கள் வாங்கிவிட்டு தராமல் ஏமாத்தியது என சிறு வயதில் செய்த அனைத்தையும் திருப்பி தர முடிவெடுத்து அதனை அடைக்க ஆரம்பித்தார் .
புளியம்பட்டியில் பாய் கடையில் லுங்கி வாங்கிவிட்டு பணம் தராமல் வந்தது, பெட்டிக்கடை கடன் உள்ளிட்டவற்றை திருப்பி செலுத்திய ரஞ்சித், வங்கியில் தள்ளுபடி செய்யப்பட்ட கடனையும் திரும்பப் செலுத்தியிருக்கின்றார் .
இத்தனை கடன்களை, திருடியவற்றை திருப்பி தந்த ரஞ்சித்துக்கு, தன் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திய எழுவாய் பாட்டியின் வீட்டில் திருடிய பணத்தை திருப்பி கொடுக்கவில்லை என்ற எண்ணம் பல இரவு உறக்கத்தை திருடியிருக்கின்றது.
அந்த பாட்டி தற்போது இருக்க மாட்டார் என்றாலும், அவர் சந்ததியினரை தேடி தந்துவிட முடிவெடுத்தார் . அதன் அடிப்படையில் சிறு வயது இலங்கை நண்பர்களிடம் விவரங்களை தெரிவித்திருக்கின்றார் .
இலங்கை உள்நாட்டு போர், வறுமையால் சுப்ரமணியம் – எழுவாய் சந்ததிகள் சிதறியிருக்கின்றனர் . சில மாத தொடர் முயற்சிக்கு பிறகு ஒருவழியாக சுப்பிரமணியம் – எழுவாய் வாரிசுகளை தொடர்பு கொண்டார் ரஞ்சித்.
சுப்ரமணியம் – எழுவாய் தம்பதிக்கு முருகையா, பழனியாண்டி, கிருஷ்ணன் 3 ஆண் , செல்லம்மாள் 1 பெண் வாரிசு. அவர்களை தொடர்பு கொண்டு பணத்தை திருடியதனையும், அதனை திருப்பி தரவும் விரும்பதாக ரஞ்சித் தெவித்திருக்கின்றார் .
கேட்ரிங்க் தொழிலதிபர் ரஞ்சித் சொன்னதை கேட்டு சுப்ரமணியம் – எழுவாய் குடும்பத்தார் நெகிழ்ந்திருக்கின்றனர் . ரஞ்சித் இலங்கைக்கு சென்று சுப்ரமணியம் – எழுவாய் ஆண் வாரிசுகள் பழனியாண்டி, கிருஷ்ணன் மற்றும் இறந்து போன முருகையா வாரிசுகள் என மூன்று குடும்பத்தாருக்கு புத்தாடைகள் மற்றும் குடும்பத்தார்களுக்கு தலா 70 ஆயிரம் ரூபாய் பணத்தை தந்திருக்கின்றார் .
பெண் வாரிசு செல்லம்மாள் இந்தியாவில் குடியேறியதனை அறிந்தார் ரஞ்சித். சில மாத தேடலுக்கு பிறகு செல்லம்மாள் இறந்துவிட்டதனையும், அவர்கள் வார்சுகள் திருச்சியில் இருப்பதனையும் அறிந்து அவர்களுக்கும் 70 ஆயிரம் ரூபாயை தந்திருக்கின்றார் .
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி இருக்கின்ற நேரத்தில், தொழிலளதிபர் ரஞ்சித் தந்த பணம் குழந்தைகளின் கல்வி மற்றும் குடும்ப செலவுக்கு உதவியாக அமைந்ததாக சுப்ரமணியம் – எழுவாய் சந்ததிகளின் குடும்பத்தினர் தெரிவித்திருக்கின்றனர்.
தேசம் விட்டு தேசம் சென்று புதுப்பிக்கப்பட்ட உறவில், அவர்களுக்குள் காட்டும் நேசம் ஏமாற்று வேலைக்கு வேஷம் போடுவோருக்கு ஒரு பாடமாகவே பார்க்கலாம்.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன் சுப்ரமணியம் – எழுவாய் பாட்டியிடம் திருடிய பணத்தை திருப்பி கொடுத்து, அவர்களின் வாரிசுகள் மனதை திருடிய கோவை தொழிலதிபர் ரஞ்சித்தின் செயல் வியப்பில் ஆழ்த்திய இருக்கின்றன .