வருங்கால CM புஸ்ஸி ஆனந்த்.. கைவிரித்த ECR சரவணன்.. நடந்தது என்ன?
Author: Hariharasudhan28 March 2025, 11:29 am
’வருங்கால CM’ என தவெக பொதுச் செயலாளர் பெயரைக் குறிப்பிட்டு ஒட்டப்பட்டுள்ள போஸ்டருக்கு புஸ்ஸி ஆனந்த், ECR சரவணன் விளக்கம் அளித்துள்ளனர்.
சென்னை: விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம், செங்கல்பட்டு அடுத்த ஒரு தனியார் ரிசார்ட்டில் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, செங்கல்பட்டு மாவட்ட பகுதியில், ‘தளபதியை (விஜய்) பொதுக்குழுவிற்கு அழைத்து வரும் தவெக பொதுச் செயலாளர் வருங்கால முதலமைச்சர் வருக’ என சென்னை புறநகர் மாவட்டச் செயலாளர் பி.சரவணனின் பெயரில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதற்கு தவெக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ECR சரவணன் கூறுகையில், “தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் என்.ஆனந்தை புகழ்ந்து ஒட்டிய போஸ்டருக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
எதிர்கட்சிகள், அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இவ்வாறு செய்திருக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது. அது மட்டுமல்லாமல், செங்கல்பட்டுக்கும், எங்கள் மாவட்டத்திற்கும் சம்பந்தம் இல்லை. மேலும், இது குறித்து சம்பந்தப்பட்ட பிரிண்டிங் பிரஸ் அலுவலகத்தில் விசாரித்து வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோல், இந்த பரபரப்பு போஸ்டர் குறித்து பேசிய தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், “யாரு, நான் அடுத்த முதலமைச்சரா? என்கிட்ட இப்படி ஒரு கேள்வியைக் கேட்கலாமா? யாரோ சில விஷமிகள் திட்டமிட்டே இப்படி போஸ்டரை ஒட்டியுள்ளனர். அதை வைத்து என்னிடம் இப்படி நீங்கள் கேட்கலாமா?
இதையும் படிங்க: வரலாறு காணாத உச்சம்.. ஒரே நாளில் ரூ.840 உயர்வு.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் என்ன?
2026ல் தமிழக முதலமைச்சராக யார் வரப்போகிறார் என்று உங்களுக்கும் தெரியும். கோடிக்கணக்கான மக்களால் தேர்வு செய்யப்பட்டு தளபதிதான் முதலமைச்சராக வரப்போகிறார் என்பது நிச்சயம். நான் தவெகவின் கோடான கோடி தொண்டர்களில் ஒருவன்தான். வேண்டுமென்றே சில விஷமிகள் 5, 6 போஸ்டர்களை ஒட்டியதை வைத்துக்கொண்டு நீங்கள் இப்படி கேட்கலாமா?” எனக் கூறியுள்ளார்.