இது தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய தலைகுனிவு… மேலும் பல கல்லூரிகளில் மருத்துவ படிப்புகளுக்கு ஆபத்து ; எச்சரிக்கும் விஜயபாஸ்கர்!!
Author: Babu Lakshmanan29 May 2023, 1:30 pm
தமிழ்நாட்டில் உள்ள மூன்று அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும், இனியாவது தமிழ்நாடு அரசு விழித்துக் கொண்டு குறைகளை நிவர்த்தி செய்து அங்கீகாரத்தை பெற தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அதிமுக அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் ரோஜா இல்லம் என்ற அரசினர் விருந்தினர் மாளிகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இந்தியாவிலேயே மருத்துவத்துறை தமிழ்நாட்டில் முதன்மை மாநிலமாக முன்னோடி மாநிலமாக இருந்து வந்தது. தற்போது இந்த துறை தலையும் புரியாமல் காலும் புரியாமல் தத்தளித்து வருகிறது. அதிமுக ஆட்சிக்காலத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கினோம். இருக்கக்கூடிய மருத்துவ கல்லூரிகளில் எம்பிபிஎஸ் இடங்களை அதிகப்படுத்தினோம். தற்போது இந்த இரண்டையும் தவிர்த்து கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த ஒரு புதிய மருத்துவக் கல்லூரியில் திறக்கப்படவில்லை.
இரண்டு ஆண்டு காலமாக எந்த ஒரு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் புதிய மருத்துவ சீட்டுகளை திமுக அரசு பெற்று தரவில்லை. இதற்கு மாறாக தங்களது நிலையை தக்கவைக்க தடுமாறும் அரசாக திமுக அரசு மக்கள் நல்வாழ்வுத்துறை உள்ளது. அதன் விளைவாக பாரம்பரிய மிக்க பெருமைமிக்க 3 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 550 எம்பிபிஎஸ் இடங்களை வரி கொடுத்து இருப்பது வருத்தத்துக்குரிய வேதனைக்குரிய விஷயம்.
உடனடியாக தமிழ்நாடு முதலமைச்சர் எம்என்சிஐ அணுகி தேவையான புகார் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பித்து ஏழை எளிய மாணவர்கள் படிக்கக்கூடிய அரசு மருத்துவக் கல்லூரியின் இடங்களை உறுதிப்படுத்த வேண்டும். 2022 மருத்துவ கலந்தாய்வில் ஆறு எம்பிபிஎஸ் இடங்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலேயே காலியாக இருந்துள்ளது. வரலாற்றிலேயே இது போன்று நடந்தது இல்லை. ஒவ்வொரு எம்பிபிஎஸ் இடத்திற்கும் ஒரு கோடி ரூபாயை அரசாங்கம் செலவு செய்கிறது. ஆனால் கடந்தாண்டு ஆறு எம்பிபிஎஸ் சீட்டை இந்த அரசு வீணடித்துள்ளது.
சுகாதாரத்துறை அமைச்சர் என்ன செய்து கொண்டிருக்கிறார் இந்த துறை என்ன செய்து கொண்டிருக்கிறது. இனியாவது சுகாதாரத்துறை அமைச்சர் விழித்துக் கொண்டு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து பதவி உயர்வு வழங்காததால் மருத்துவர்கள் போராடக்கூடிய நிலையில் உள்ளனர். செவிலியர்களும் போராடக்கூடிய நிலையில் உள்ளனர். ஏன் இந்த எம்பிபிஎஸ் இடங்கள் காலியாகிறது என்றால் பதவி உயர்வு வழங்கவில்லை. 450 பேராசிரியர்கள் இடம் காலியாக உள்ளது. 550 உதவி பேராசிரியர்களின் இடம் காலியாக உள்ளது. பதவி உயர்வு வழங்கவில்லை. அவர்களுக்கு கலந்தாய்வு கொடுக்கவில்லை.
பதவி உயர்வு வழங்கி கலந்தாய்வு நடத்தினால் தான் பேராசிரியர் இடங்களை நியமிக்க முடியும். வலுவான கட்டமைப்பை 750 படுக்கைகளை கொண்ட மருத்துவமனைகளை அதிமுக ஆட்சியில் நாங்கள் உருவாக்கிக் கொடுத்துள்ளோம். வெறும் 1945 எம்பிபிஎஸ் இடங்களை நாங்கள் பொறுப்புக்கு வந்த பிறகு 5225 எம்பிபிஎஸ் இடங்களை கொடுத்துள்ளோம். முதுநிலை சீட்டுகளை கொடுத்தோம். இது போன்ற எல்லா சீட்டுகளையும் பறிகொடுத்து செல்கின்ற நிலை வேதனைக்குரியது.
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்துள்ள 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 465 ஏழை மாணவர்கள் படிக்கக்கூடிய வாய்ப்பு எல்லாம் அதிமுக ஆட்சியில் உருவாக்கித் தந்துள்ளோம். 11 மருத்துவக் கல்லூரிகளை கொண்டு வந்து 1650 சீட்டுகளை பெற்று தந்தோம். ஆனால் தற்போது மருத்துவ இடங்களை பறி கொடுத்துள்ளது. தமிழ்நாட்டிற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய தலைகுனிவு. உடனடியாக அரசு இதில் சிறப்பு கவனம் செலுத்தி தேவையான ஆவணங்களோடே எம்என்சியை அணுக வேண்டும்.
அல்லது நாங்கள் ஒன்றிய அரசை அதிமுக சார்பில் வலியுறுத்துவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். அதனால் இந்த அரசால் முடியுமா முடியாதா என்று தெரிவிக்க வேண்டும். மருத்துவ கனவோடு எதிர்நோக்கி இருக்கின்ற மாணவர்களின் கனவு பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக இந்த அரசை நாங்கள் வலியுறுத்துகிறோம்.
சாதாரண சிசிடிவி கண்காணிப்பு கேமராவை கூட முறையாக பராமரிக்கவில்லை என்றால் எப்படி நோயாளிகளை பராமரிக்க முடியும். உயிர் போற விஷயம், அதனால் நோயாளிகளை முறையாக கண்காணிக்க வேண்டும். எம்என்சி உடைய நிபந்தனைகள் என்னவென்று தெரியும். அதை முழு நிறைவோடு வைத்திருக்க வேண்டும். திடீரென்று அவர்கள் சோதனைக்கு வருவார்கள் என்று அனைவருக்கும் தெரியும். தனியார் மருத்துவமனைகளில் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. திமுக நடத்தக்கூடிய கல்லூரிகளிலும் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. ஏன் அரசு கல்லூரிகளில் ஏன் கவனம் செலுத்தவில்லை.
தேசிய மருத்துவ ஆணையம் ஒன்றிய அரசை சார்ந்துள்ள தன்னாட்சி பெற்றது. சிறுகுறையாக இருந்தாலும் பெரு குறையாக இருந்தாலும் ஏன் அந்த குறைகளை நிவர்த்தி செய்யவில்லை என்பது தான்.
அங்கீகாரம் ரத்துக்கு வருகை பதிவேடு பின்பற்றாதது ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. வருகை பதிவேடு ஏன் பின்பற்றவில்லை என்றால் 450 பேராசிரியர்கள் 550 உதவி பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்பவில்லை. அதை நிரப்பாததால் தான் வருகை பதிவேடை அவர்களால் பின்பற்ற முடியவில்லை. பணியிடங்கள் ஏன் காலியாக உள்ளது என்றால் அவர்களுக்கு முறையான பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தவில்லை. அதனால் பயோமெட்ரிக்கை அவர்கள் இயக்கவில்லை. அதனால் தான் இந்த குறை ஏற்பட்டுள்ளது.
அதனால் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சொல்லும் காரணங்கள் ஏற்புடையதாக இல்லை. கட்டமைப்பை முறையாக பராமரிக்காத காரணத்தால் தான் இந்த இடங்கள் பறிபோய் உள்ளது. இதை உடனடியாக சரி செய்து ஏழை எளிய மருத்துவ மாணவர்களின் கனவை நிறைவேற்ற வேண்டும். அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டு அதை நிவர்த்தி செய்ய இன்னும் கால அவகாசம் உள்ளது. இந்த அவகாசத்தை பயன்படுத்தி மருத்துவ மாணவர்களுக்கான கவுன்சிலிங் தொடங்குவதற்கு முதல் நாளுக்குள் இந்த குறைகளை நிவர்த்தி செய்து எம்என்சி-ஐ அணுகி மீண்டும் ஆய்வுக்கு வரச் சொல்லி அந்த ஆய்வின் அடிப்படையில் மீண்டும் இந்த இடங்களை பெற வேண்டும்.
இந்த மூன்று கல்லூரிகளில் ஏற்பட்ட நிலை மற்ற கல்லூரிகளுக்கும் ஏற்படக்கூடும் என்ற தகவல் வருகிறது. அதனால் தான் அதிமுக சார்பில் எதிர்க்கட்சி என்ற முறையில் நாங்கள் தமிழ்நாடு அரசுக்கு எச்சரிக்கின்றோம். இதை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம். இதை சரி செய்தால் மகிழ்ச்சி, என்று தெரிவித்தார்.