தேர்தலில் போட்டியிட்டு ஜெயிக்க முடியுமா? அண்ணாமலைக்கு சவால் விடும் துரைவைகோ!
Author: Udayachandran RadhaKrishnan17 February 2024, 7:06 pm
தேர்தலில் போட்டியிட்டு ஜெயிக்க முடியுமா? அண்ணாமலைக்கு சவால் விடும் துரைவைகோ!
வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ, கடந்த 2014ம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்காக உயர்த்தப்படும் என்று தெரிவித்தார்.
ஆனால் கடந்த 9.5 ஆண்டு காலமாக எதுவுமே நிறைவேற்றப்படவில்லை. கடந்த 9 ஆண்டு கால பாஜக ஆட்சியில் நாடு முழுவதும் 1.50 இலட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
விவசாயிகள் கேட்கும் குறைந்தபட்ச ஆதார விலையை கூட மத்திய அரசு கொடுக்க மறுக்கிறது. கடந்த ஆண்டு விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தினார்கள். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய மோடி அரசு குறைந்தபட்ச ஆதார விலை தருவதாக உறுதியளித்தது அதனை நிறைவேற்றாததால் மீண்டும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வருகிற 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என அனைவரும் ஒன்றிய பாஜக அரசுக்கு தகுந்த பாடத்தை கற்பிப்பார்கள். கர்நாடக அரசு உள்ளிட்ட எந்த அரசாக இருந்தாலும் தமிழ்நாட்டை வஞ்சித்து மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவிற்கு உரிமை இல்லை.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஒரு சராசரியான அரசியல்வாதி இல்லை. அவர் ஒரு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி. அவர் அரசியல் வருவது நல்லது என பல்வேறு தரப்பினர் நினைத்தார்கள். ஆனால் தற்பொழுது அவர் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளார்.
தவறான அறிக்கைகள், தரவுகளை கொடுப்பது போன்ற செயல்களில் அவர் ஈடுபட்டு வருகிறார். அவருடைய செயல்பாடுகளால் அவரைச் சார்ந்த பாஜக இயக்கமும் பாதிக்கப்படும்.
அரசியல் இயக்கங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மக்களின் வாழ்வாதாரத்தை பற்றி பேச வேண்டுமே தவிர மக்களின் வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு, கட்டமைப்பு, அடிப்படை வசதிகள் குறித்து விவாதங்கள் இருக்கலாம். பொது மேடைகளில் இது போன்ற விவாதங்களை தொடரலாம்.
தமிழகத்தைச் சார்ந்த அரசியல் கட்சிகள் ஜாதி, மதத்தை வைத்து தான் அரசியல் செய்கிறார்கள் என்றும் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றத்திற்கு முக்கிய காரணம் எரிபொருட்களின் விலை மட்டுமே தான் காரணம். இதற்கு பாஜக அரசுதான் முழு காரணம் என தெரிவித்தார்.
பாஜகவிற்கு தமிழகத்தில் எழுச்சி உள்ளதாக அக்கட்சியினர் கூறுகின்றனர். வேண்டுமென்றால் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கூட்டணி அமைத்தோ அல்லது தனி கட்சியாகவோ தேர்தலில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெறட்டும்.
அப்போது தான் பாஜகவுக்கும், அதனை ஆதரிக்கும் இந்து அமைப்புகளுக்கும் தமிழகத்தில் எவ்வளவு செல்வாக்கு இருக்கின்றது என தெரியவரும் என்று சவால் விடுத்துள்ளார்.
0
0