ஆந்திராவில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் கஞ்சா கடத்தல் : 44 கிலோ கஞ்சாவை கீழே போட்டுவிட்டு தெறித்தோடிய கும்பல்… சேஸ் செய்த போலீஸ்…!!
Author: Udayachandran RadhaKrishnan24 May 2022, 9:47 pm
சென்னை : ஆந்திராவில் இருந்து ரயில் மூலம் கடத்தி வரப்பட்ட 44 கிலோ கஞ்சா ஓட்டேரியில் சிக்கிய நிலையில் 4 பேர் தப்பி ஓடினர், ஒருவர் பிடிபட்டார்.
சென்னை ஓட்டேரி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பெரம்பூர் ரயில் நிலையம் பின்புறம் மங்களபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அங்கு இருந்த டீக்கடையில் 3 பெரிய பார்சல்களுடன் இரண்டு நபர்கள் நின்று கொண்டிருந்தனர்.
போலீசார் அவர்களை நோக்கி சென்ற போது இருவரும் ஓட ஆரம்பித்தனர். அப்போது போலீசார் ஒருவரை துரத்தி பிடித்தார். மேலும் அங்கு இருந்த பார்சல்களை சோதனை செய்தபோது அதில் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து அந்த நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்ததில் பிடிபட்ட நபர் சேலம் மாவட்டத்தை சேர்ந்த தினேஷ் (வயது 24) என்பது தெரியவந்தது.
இவர் நேற்று அதே ஊரை சேர்ந்த யோகராஜ், மோகன், இந்துமதி , பிரகாஷ் ஆகிய நபர்களுடன் சொகுசு கார் மூலம் சென்னைக்கு வந்துள்ளனர். பின்னர் அவர்களுக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் பேரில் பெரம்பூர் ரயில் நிலையம் பின்புறம் வந்து காத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது ஆந்திராவில் இருந்து வந்த ரயிலில் காலை 4 மணிக்கு மூன்று பார்சல்களில் கஞ்சாவை கொண்டு வந்த மர்ம நபர்கள் இவர்களிடம் கொடுத்து விட்டு சென்றதாகவும் அதனை எடுத்து கொண்டு எதிரே இருந்த டீக்கடையில் வைத்து விட்டு காரை மற்ற நபர்கள் எடுத்து வரும் வரையில் காத்திருந்ததாகவும் கூறினார். அந்த நேரத்தில் போலீசார் பிடித்ததும் விசாரணையில் தெரிய வந்தது.
தினேஷ் போலீசில் சிக்கிய தகவல் தெரிந்தவுடன் காருடன் வந்த நபர்கள் தலைமறைவாகிவிட்டனர். ஆந்திராவிலிருந்து வரும் கஞ்சாவை கார் மூலம் சேலத்திற்கு கொண்டு செல்ல இவர்கள் வந்தது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தொடர்ந்து கைது செய்யப்பட்ட தினேஷிடம் ஓட்டேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மூன்று பார்சல்களில் இருந்து 44 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.